நவீன தமிழ் கவிஞர்கள் - சக்தி ஜோதி

சக்தி ஜோதி - இன்றைய தமிழ் சூழலில் ஒரு தனித்துவமான கவிஞர்.

சக்தி ஜோதியின் கவிதைகள் பெண்ணின் மனதை, நூற்றாண்டுகளாக  அடக்கப்பட்ட வேட்கையை எழுத்தாய்  வடிப்பவை. சங்க கால பெண் கவிஞர்களின் வழியில் நுட்பமும், காதலுமான பெண் மனதை, பெரும்பாலும் தமிழில் எழுதுபடாத பெண் மனதின் ஆசைகளை, காதலை வெளிக்கொணருபவை .

என்னைச் சித்திரமாக     
வரைந்து கொண்டிருக்கும்
உனக்குத் தெரியாது
நான்
எத்தனை முறை
வரையப் பட்டுள்ளேன் என்பதும்
ஒவ்வொரு முறையும்
என் முகம்
எவ்வாறு மாறிப் போனது என்பதும்
நான்
யார் யாருக்கோ அடையாளமாக
இருக்கையில்
உன் நினைவில்
என்னிருப்பை உணர்கின்றேன்.
நீயும்
ஒரு சித்திரத்தை வரைந்து விடாதே.

என்ற கவிதையில் ஒவ்வொரு பெண்ணின் தனிமையின், புது உறவின் நிச்சயமின்மையை, தன்னிலை பெற்று இருக்க முடியாது , ஒவ்வொருவரின் ஓவியமாய் , வெறும் தாய், மனைவி, மகள் என்று , தன் சுயம் அழித்து வாழும் தமிழ் பெண்களின் இரைஞ்சல் அது.

பெண் மனதின் காமத்தை இத்துணை அழகாய் இதுவரை யாரும் எழுதவில்லை என்றே சொல்வேன். சக்திஜோதியின் முழு மொழி வன்மையும் அவரது இத்தகைய கவிதைகளிலேயே வெளிவருகிறது.

இன்றைய  இரவின் நிலவு
அத்தனை  குளிர்வாய்  இருக்கிறது
.....

அரும்புகிற  கவிதை வரிகளை
மலரச்செய்கிறது
எழுதப்படாத  சொற்களை
நிலவின் முன் வைத்துக் காத்திருக்கிறேன்

 நிலவு  தன்  ஒளிவரிகளால்
என் மீது
எழுதத்  தொடங்குகிறது
பின்னிரவில்
வெப்பம்  தணிந்த  உடலின்
கண்களில்
இரண்டு  நிலவு  மிதந்துகொண்டிருக்கிறது .

  
போன்ற வரிகளில் கலவியின் முடிவின் மனநிலையை படிமங்களால் நிரப்புகிறார். காமம் அழகாய் கலவி நடத்துகிறது.

ஆனால் சக்தி ஜோதியின் கவித்துவம் முழுமையாய் வெளிவருவது அவரின் காதல் கவிதைகளில் தான்.

சக்தி ஜோதியின் மனம் காதலின் மன எழுச்சிகளை கூர்மையாக உற்று நோக்கி அதை கவிதையாய் வடிக்கிறது. இத்துணை ரசனையுடன் காதல் கவிதைகளை வாசித்தது 'குறுந்தொகை' 'நற்றிணை'க்கு பிறகு இப்போதுதான்.


ஓடும் நதியில் தவறி விழும் ஒற்றையிலை
சலனப்படுத்துவதில்லை நீரின் போக்கினை
என்றறிந்திருந்த மனம்
விம்மிக் கசிகிறது
பழுத்த மஞ்சளும்
வெளிர் பச்சையும் கலந்து
மையம் அகன்று முனை குறுகிய அந்த இலை
நதியில் மிதந்து கொண்டிருக்க
அவன் கண்களை நினைவூட்டியபடியிருந்தது.
விருட்சமென வளரத் துவங்கியது
அவனது வேர்கள்

புலனிலகப்படாமல் கிளைத்துப் பரவின
நிலமெங்கும்
நதியின் போக்கில் செல்லும் அவ்விலை
கண்களிலிருந்து மறைய
நிசப்தமாகிறது காற்று.


சக்தி ஜோதியின் கவிதை உலகம் முற்றிலும் தன் மனதை சார்ந்தது. புற உலக நிகழ்வுகள் அதில் வெறும் காட்சியாய் மட்டுமே வருகின்றன. அவரது சமூக அக்கறை கவிதைகளை தாண்டி வருகிறது.

"ஒரு துளி கண்ணீர் வழியாக கடந்து செல்கிறது அன்பு" போன்ற வரிகள் காதலின் கையறு தன்மையை, ஆதங்கத்தை வெளி கொணர்கிறது.

அவரை சங்க தமிழ் பெண் புலவர்களின் தொடர்ச்சியாகவே பார்க்கலாம்.ஒரு பெண்மனதை எழுத்தில் இவ்வளவு அருகாமையில் தமிழில் யாரும் சமீபத்தில் எழுதவில்லை என்றே சொல்லலாம்.

என்னை பொறுத்த வரை, இன்றைய தமிழின் பெரிதும் அறிந்து கொள்ள படாத, ஆனால் பெரிதும் கொண்டாடப் படவேண்டிய மிக முக்கிய கவிஞர்களில் ஒருவர்.

 புத்தகங்கள்
1. உடல் மனம் மொழி
2. எனக்கான ஆகாயம்
3. கடலோடு இசைத்தல்
4. நிலம் புகும் சொற்கள் 
5.  காற்றில் மிதக்கும் நீலம்

No comments:

Mayaanadhi (2017)

There is a moment in the movie which comes a little later into the film. Aparna (Aishwarya Lekshmi) and Maathan (Tovino Thomas) had sex aft...