நிலவு மணல்

இன்று முழு நிலவு. அலுவலகத்தில் இருந்து திரும்பி வரும் போது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் குறுக்கே இருக்கும் சாலையில் வரும் போது மெதுவாய் எழும் நிலவு ஒரு மஞ்சள் நிறத்தின் சாயலில் அழகாய் இருந்தது. அந்த வாகன நெரிசலில் எத்துணை பேர் அந்த நிலவை ஒரு ரசனையுடன் பார்த்திருப்பார்கள் என்று ஒரு யோசனை. அப்படியே ஒரு சிலராவது பார்த்து ரசித்திருப்பார்கள் என்று நினைத்துகே கொண்டேன்.

கூடவே ஒரு பயம் - நேற்று பாபாவை பார்த்தவர்கள் இன்று எதை பார்ப்பார்களோ என்று? இருந்தாலும் இன்று பல முறையும் நிலவு பார்க்க நேரிட்டது.

அழகியலின் உபயோகம் என்பது மனதிற்கு மகிழ்வு தருவது மட்டும் தானா? அதன் பொருட்டே அது ஒரு விதத்தில் இந்த பண்ட மாற்று உலகில் உபயோகம் அற்றதாய் பார்க்க படுகிறதா? சிபியை திரும்ப கூடி வரும் போது சாமி-2வை பற்றி பேச்சு வந்தது. அதனுடன் கலையின் நேர்த்தி மற்றும் பொது புத்தியின் வீழ்ச்சி என்று பேசிக் கொண்டே வந்தோம். நேர்த்தி அற்ற ஆபாசமான கலையை தவிர்ப்பது என்பது நமது தேர்வு மட்டுமே என்று சொல்லிக் கொண்டு வந்தேன்.

தரங்கம்பாடியில் என்றோ ஒரு இரவு
"புணரி பொருத பூ மணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊர

நிலவு விரிந்தன்றால் கானலானே." (நற்றிணை 11)

தலைவன் தேரில் ஏறி தலைவியை காண பூக்கள் சிதறிக் கிடக்கும் கடற்கரையில் மெதுவாய் வருகிறான். ஏனெனில் அந்த நிலவு விரிந்த முழுநிலவு நாளில் ஓடிக் கொண்டிருக்கும் நண்டுகள் மீது பட்டு விடாமல் தேரை மெதுவாய் ஒட்டி வருகிறான் என்கிறார் உலோச்சனார். இந்த பாடல் கொஞ்சம் பரிச்சியமானது. அந்த 'நிலவு விரிந்தன்றால்' என்பது எப்போதும் மறக்க முடியாதது.

அதில் இருந்து நிலவுமணலிற்கு சிறிது தூரம்தான். அகநானூற்றில் இதே உலோச்சனார் இன்னொரு பாடலிலும் இது போலவே தலைவனை கடற்கரையில் தேர் ஓட்ட விடுகிறார்.

"கொடிது அறி பெண்டிர் சொல் கொண்டு அன்னை
கடி கொண்டனளே தோழி பெருந்துறை
எல்லையும் இரவும் என்னாது கல்லென
வலவன் ஆய்ந்த வண் பரி 
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே." (அகநானூறு 20)


தலைவனும் தலைவியும் காதலில் இருக்கும் நேரம் ஊராரின் அலர் கேட்டு தலைவியின் தாய் தலைவிக்கு தலைவனை காண தடை விதிக்கிறாள். அது கேட்டு தலைவன் தேரில் இரவில் 'நிலவுமணலில்' வருவானே பார்ப்பதற்கு என்ன செய்வது என்கிறாள்.

நிலவு மணல் என்பது நிலவின் வெளிச்சம் பரவிய கடல் மணலா அல்லது நிலவு போன்ற வண்ணம் கொண்ட கடல் மணலா ? எதுவாய் இருக்கும்.

முழு நிலவின் இரவில் கடல் ஒரு மாய உலகமாய் காட்சி தரும். கடல் நீரின் எல்லையற்ற பரப்பில் சிதறும் நிலவின் வெளிச்சம் இரவு முழுதும் பார்க்க வேண்டிய  ஒன்று. அது போன்றே யாருமற்ற முழு நிலவின் இரவில் கடலின் கரையில் அலை வந்து போகும் போது சிதறும் நண்டுகள் மணலில் காட்டும் நிழலின் நடனம் கண்களை ஏமாற்றும். மினுக்கும் அந்த மணலில் நிலவு பல்லாயிரத்துண்டுகளாய் சிதறும். எங்கு நிலவு முடிந்து மணல் தொடங்குகிறது என்பது மயக்கமாகும்.

இரவின் இந்தக் காட்சியை பார்ப்பது மட்டுமன்றி அதை நினைவுறுத்தி எழுத்தில் வடிப்பது என்பது கவியின் திறம் மட்டுமன்று - அழகியலின் நேர்த்தி என்பது இதை கண்டு கடந்து செல்லாது அதை உள்வாங்கி கொள்வதும் ஆகும்.

இந்த பாடல்களை தேடிய போது இன்று வைதேகி ஹெர்பர்டின் வலை பக்கத்தில் இந்த நிலவுமணலின் குறிப்பொன்றை காண நேரிட்டது. சங்கப்பாடல்களில் 12 இடங்களில் இந்த பதம் உபயோகிக்க பட்டிருக்கிறது. அதில் இருந்தே இந்த குறுந்தொகை பாடலை கண்டுகொண்டேன்.

"இருள் திணிந்தன்ன ஈர்ந் தண் கொழு நிழல்
நிலவுக் குவித்தன்ன வெண்மணல் ஒரு சிறைக்
கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப
இன்னும் வாரார் வரூஉம்
பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே"


நிலவுக் குவித்தன்ன வெண்மணல் - நிலவை (நிலவின் ஒளி) குவித்து வைத்தது போன்ற வெண்மணல் , ஒளியை எப்படி குவிப்பது - அதுவும் நிலவின் ஒளியை - கடலின் மணல் நிலவின் ஒளியுடன் விளையாடுவது எத்துணை அழகானது.

அழகியலின் பயன் என்பது மனதின் மகிழ்ச்சி.

No comments:

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...