கங்காபுரம் - அ. வெண்ணிலா

தமிழில் வரலாற்று புதினம் எழுதுவதெற்கென்று ஒரு பாதை உண்டு. கல்கியால் ஆரம்பிக்கப்பட்டு , விக்ரமன், அகிலன், நா.பா, சாண்டில்யன் என ஒவ்வொருவரும் நூல் பிடித்தாற் போல் நடந்த பாதை. ஒரு நாயகன் - அவன் பயணம் - ஒரு இளவரசியின் காதல் - ஒரு வரலாற்று சம்பவத்தின் நடுவே நம் நாயகன் - பல திருப்பங்களுக்கு பின் கதை முடிவுறும்.

இந்த templateக்கு சுஜாதாவும் விலக்கல்ல - 'காந்தளூர் வசந்தகுமாரனின் கதை' வாசிக்கும் போது எப்போது கணேஷும் வசந்தும் வருவார்கள் என்று தோன்றாத நேரமே இல்லை. பல வருடங்களுக்கு முன் கணையாழியில் வந்த நகுபோலியன் எழுதிய 'மழநாட்டு மகுடம்' மட்டுமே இந்த template கதைகளை கேலி சித்திரமாய் ஆக்கியது. தமிழ் வரலாற்று புதினத்தில் இந்த அலுப்பூட்டும் கதைகளை எழுதுவதை யாரும் நிறுத்த போவதில்லை என்பதே ஆயாசமாய் இருந்தது.

'கங்காபுரம்' இந்த templateஐ உடைப்பதன் மூலம் ஒரு புது வகையான (உண்மையில் வெகு பழமையான) வரலாற்று புதினத்திற்கு வழி வகுக்கிறது. இது ஒன்றே இந்த புத்தகத்தை படிப்பதற்கு போதுமான காரணம்.

ராஜேந்திர சோழனின் கதை எப்போதும் ராஜ ராஜனின் கதையின் ஊடாகவே சொல்லப்பட்டு வருகிறது. சோழ நாட்டின் பெரும் அரசனாய் இருந்த போதும் தன தந்தையின் நிழலிலேயே இருக்க வேண்டிய நிலை அவனுக்கு. அ. வெண்ணிலா, ராஜேந்திர சோழனின் இந்த 'தனிமை'யை எழுதுகிறார்.

நம் அரசர்களின் கதை அவர்களின் காதல்களாலும், போர் வெற்றி தோல்விகளாலும் மட்டுமே சொல்லப் பட்டு வந்திருக்கிறது. புறநானூறு, அகநானூறு காலங்களில் இருந்தே இதுதான் நம் வரலாறு. இந்த காதல்களுக்கும் , போர்களுக்குமான இடைவெளியில் இந்த அரசர்கள் என்ன செய்தார்கள்? சோழர் காலத்திலேயே இதற்கான விரிவான விடை அவர்களின் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கிடைக்கிறது. அவர்கள் எழுப்பிய கற்றளிகள், செய்த நிவந்தங்கள், ஆட்சி முறை, மக்கள் மன்றங்கள், நிலப்பிரிவுகளும் அதன் ஆட்சி அமைப்புகளும் என சோழர்கள் தங்கள் தினசரி நடவடிக்கைகளின் தடயங்களை விட்டு சென்றுள்ளனர்.

வெண்ணிலா இந்த தடயங்களை சேகரித்து அவற்றின் ஊடே கதையை நகர்த்துகிறார்.ஊர் சபைகள், தேவரடியார் வாழ்வு, ராஜ ராஜன் பிரம்மதேயம் மூலமாக நிலம் பார்ப்பனர்கள் கை  மாறுவது, இடக்கை - வலக்கை சாதி பிரிவுகள் ஆழமாதல் என பல சமூக மாற்றங்களையும் தொட்டு செல்கிறது கதை.
ராஜேந்திரன் காதல் செய்தாலும் , போர் செய்வதில்லை (இந்த கதையில்!). ராஜேந்திர சோழன் என்ற கட்டமைக்கப்பட்ட அரசனின் பிம்பத்தில் இருந்தும் ராஜேந்திர சோழனாகிய மனிதனை மீட்டெடுக்க முயல்கிறார் வெண்ணிலா.

தஞ்சை எப்போதும் தன தந்தையின் அடையாளமாகிவிட்டதால் தனக்கென்று ஒரு தலைநகரம் , பெரிய கோவிலின் மாற்றாய் இன்னுமொரு கோயில் பெருவுடையாருக்கு என்று ராஜராஜனின் நிழலில் இருந்து ஓடுவதே அவன் வாழ்வின் பிரதானமாகிறது. வீரமாதேவி - பரவை நங்கை என காதல்களுக்கு பஞ்சமில்லை எனினும் அவனின் ஐந்து மனைவியர் பற்றி ஏதுமில்லாதது கொஞ்சம் ஏமாற்றமே.ராபர்ட் கிரேவ்சின் க்ளாடியஸ் சரித்திர நாவல்களின் தன்மை கொஞ்சம் தெரிந்தாலும் , அவற்றின் விரிவு தன்மை இல்லாதது ஒரு குறையே.

ஒரு தமிழ் சரித்திர நாவலின் எந்த லட்சணமும் இன்றி ஒரு சுவாரசியமான கதையை சொல்லி இருப்பது நன்று.

No comments:

The Discovery and Conquest of Peru - Zarate.

பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...