அறியப்படாத கிறிஸ்துவமும், அய்யனார் கதையும் - 5

இடையன்குடி.

தமிழகத்தில் கிறிஸ்துவத்தை பரப்ப வந்தவர்களில் ராபர்ட் கால்டுவெல் மிகவும் தனித்துவமானவர். அவர் கிறிஸ்துவத்தை பரப்பவே வந்திருந்தாலும், அவரது விருப்பங்கள்  அதில் மட்டுமல்லாமல் இன்னமும் பல துறைகளிலும் இருந்ததால், அவரது பங்களிப்பை சரியாக கணிப்பது சிரமம். அவர் மொழியியல் இலக்கண ஒப்பு நோக்கி ஆராய்ச்சி செய்திருக்கிறார். காயல்தான் கிரேக்க புத்தகங்களில் குறிப்பிடப்படும் நகரம் என்றும் கண்டறிந்தவர். கொற்கையில் அகழ்வாராய்ச்சி செய்தார். இன்றைய ஆதிச்சநல்லூரில் அலெக்சாண்டர் ரீக்கு முன்னரே அகழ்வாராய்ச்சி செய்ய ஆரம்பித்தவர். சரித்திர ஆராய்ச்சி செய்து புத்தகம் எழுதினார். இங்கிருக்கும் மக்களின் பழக்கவழக்கங்களையும் ஆராய்ந்து எழுதியவர். அவர் அறிந்திராத துறைகளோ, இந்த மக்களுக்காக அவர் செய்யாத உதவிகளோ இல்லை என்றே கூறலாம். 

இடையன்குடி உவரியில் இருந்து சிறிது தூரத்திலேயே இருக்கிறது. வழக்கம் போல கூகுள் கால்டுவெல்லின் நினைவில்லத்திற்கு பதிலாக ஊருக்கு வெளியே இருந்த எலிசா செவிலியர் பள்ளியின் பெண்கள் இல்லத்திற்குள் எங்களை திருப்பி விட்டு விட்டது. நல்லவேளையாக அங்கிருந்த சிறிது வயதான பெண் எங்களுக்கு சரியான வழியை தெரிவித்து அனுப்பி வைத்தார்.

இடையன்குடியில் இருக்கும் தூய திரித்துவ தேவாலயம் தமிழகத்தில் இருக்கும் CSI தேவாலயங்களில் மிகவும் பழமையானது. ராபர்ட் கால்டுவெல்லின் மேற்பார்வையில் 32 வருடங்கள் பல்வேறு தடைகளைத் தாண்டி எழுப்பப்பட்டது. இங்கும் கோவிலுக்கு அருகிலேயே கால்டுவெல் ஆரம்பித்த பள்ளி, பின்புறத்தில் ஒரு மருத்துவமனை போன்றவை இருக்கின்றன. இப்போதிருக்கும் தேவாலயத்திற்கு முன்பு எழுப்பப்பட்ட சிறிய ஆலயமும் அருகிலேயே இருக்கிறது. நாங்கள் சென்ற நேரத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அங்கே நடந்து கொண்டிருந்தது. அதனுள்ளேயே ஒரு ஆரம்பப்பள்ளியும் இருக்கிறது. 

அன்றைய தினம் பள்ளிக்கு இந்த பருவத்தின் கடைசி தினமாக இருக்கவேண்டும். எல்லாப்பக்கமும் மாணவர்களும், மாணவிகளும் உற்சாகமாக ஆடிக் கொண்டும், ஓடிக் கொண்டும் இருந்தார்கள். அவர்களின் இடையே நாங்கள் தேவாலயத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தோம். உள்ளேயே ராபர்ட் கால்டுவெல் மற்றும் அவரது மனைவியின் கல்லறைகள் இருந்தன. ஆனால் கிறிஸ்துமஸிற்காக அவற்றின் மீது சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த ஒரு சிறு பெண் எங்களுக்கு அவை எங்கே இருக்கின்றன என்று காட்டி கொடுத்தாள்.

புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த தேவாலய மணிக்கு செல்லும் வழி திறந்துதான் இருந்தது. ஏறிவிடலாம் என்றால் உள்ளே வவ்வால்களின் வாடை மிகவும் அடர்த்தியாக இருந்ததாலும், இப்போதைக்கு batmanஆக எனக்கு விருப்பமில்லாததாலும் கீழிருந்தே பார்த்துவிட்டு கிளம்பினோம்.

தேவாலயத்திற்கு அருகிலேயே கால்டுவெல் நினைவில்லம் இருக்கிறது. நாங்கள் சென்ற நேரம் பூட்டியிருந்தாலும் (மதிய உணவு நேரம்), அங்கிருந்த ஒருவர் அதன் காவலாளி அருகில் இருக்கும் மருத்துவமனை வளாகத்திலேயே இருப்பதாக தெரிவித்து, அவரே சென்று கூட்டியும் வந்துவிட்டார். 

நினைவில்லம் பல அரிய புகைப்படங்களை கொண்டிருக்கிறது. ஆனால் கட்டிடத்தின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. உத்தரங்கள் எல்லாம் எப்போதும் விழுந்துவிடலாம் போலவும், தரையில் பதித்திருந்த கற்கள் எல்லாம் வெளியே வந்தும், உடைந்தும் இருந்தன. இல்லத்தையும் சிறிது பராமரித்து நல்ல முறையில் வைத்திருக்கலாம். 

அங்கிருந்து கிளம்பி சொக்கன் குடியிருப்பு வந்து சேர்ந்தோம். அங்கும் தேவாலயம் மூடியிருந்தது. ஊரிலும் யாருமே இருப்பது போல தெரியவில்லை. வெளியிலே இருந்த கல்லறைகளை மட்டும் பார்த்துவிட்டு அங்கிருந்து தூத்துக்குடிக்கு கிளம்பினோம்.

அறையில் வந்து சிறிது இளைப்பாறிவிட்டு, தூத்துக்குடியில் பார்க்க விரும்பிய சில இடங்களுக்கு கிளம்பினோம்.

தூத்துக்குடி.

தமிழகத்தில் ஆங்கிலேயர்களும், போர்துகீசியர்களும் மட்டுமே கிறிஸ்துவத்தை பரப்பவில்லை. பிரெஞ்சு, டச்சு போன்ற பல நாட்டவர்கள் தங்களது அடையாளங்களை விட்டு சென்றிருக்கிறார்கள். தூத்துக்குடி சில காலம் டச்சு நாட்டினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது அவர்கள் எழுப்பிய ஒரு தேவாலயமே எங்களது அடுத்த இலக்கு.

இந்தியாவை கைப்பற்றி அதன் வளங்களை எடுத்து செல்ல ஆங்கிலேயர் மட்டுமே இங்கு வரவில்லை. போர்த்துகீசியர், டச்சு, பிரெஞ்சு என பல நாட்டவர்களும் வந்து சென்றார்கள். இவர்களிடையே கடும் போட்டி நிலவியது. கடற்கரை நகரங்கள் கைமாறிக் கொண்டே இருந்தன. மெட்ராஸ், பாண்டிச்சேரி என கடலோர நகரங்கள் அனைத்தும் பல்வேறு நாட்டினரால் கைப்பற்றப்படுவதும், கைவிடப்படுவதுமாக இருந்தன. தூத்துகுடியும் இதற்கு விதிவிலக்கல்ல. 

இங்கு போர்த்துகீசியர்கள் முதலில் வந்தார்கள். பின்னாலேயே டச்சு நாட்டவர் வந்தார்கள். இவர்களின் மதங்களும் வேறாக இருந்தது. போத்துக்கீசியர்கள் ரோமை கத்தோலிக்கர்கள். டச்சு நாட்டவர் சீர்திருத்த சபையை சேர்ந்தவர்கள் (இன்றைய CSI). எனவே தேவாலயங்கள் எழுப்புவது மட்டுமல்ல, இடிப்பதும் நடந்து கொண்டிருந்தது. 

அப்படியே போர்துகீசியர்களிடம் இருந்து தூத்துக்குடியை கைப்பற்றிய டச்சு நாட்டவர், அவர்களது தேவாலயங்களை இடித்து, தங்களது தேவாலயங்களை எழுப்பினார்கள். இதனால் பல வரலாற்று சுவடுகள் அழிந்து போயின. 

கடற்கரை சாலையில் அமைதியாக இருக்கும் புனித திரித்துவ தேவாலயம் அப்படியாக டச்சு நாட்டவரால் எழுப்பப்பட்டது. 'அறியப்படாத கிறிஸ்துவம்' புத்தகத்தில் இப்படியாக இடிக்கப்பட்ட போர்த்துகீசிய ஆலயத்தில் இருந்த ஒரு கல்லறை மட்டும் புதிதாக எழுப்பப்பட்ட டச்சு தேவாலயத்தில் இருப்பதை பற்றிய குறிப்பு இருக்கிறது. போர்த்துகீசிய குரு ஒருவரின் மகளான சுவானாள் என்பவளின் கல்லறை என்று கூறப்படுகிறது.  அதையும் சேர்த்து பார்க்கவே சென்றோம்.

இந்தக் கோயிலும் பூட்டியிருக்கவே, சிறிது ஏமாற்றமாக இருந்தது. அப்போது அங்கே வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த ஒருவர் எங்களை கண்டவுடன், கதவை திறந்துவிட்டார். மாலை ஏழு மணிக்கு பூசை இருப்பதாகவும்  தெரிவித்தார். நாங்களும் உள்ளே சென்று பார்த்தோம்.

பழமை சிறிதும் மாறாமல் தேவாலயம் இருந்தது. நாங்கள் எதிர்பார்த்து சென்ற தமிழ் எழுத்துக்கள் பொறித்த கல்லறை கல்லும் அப்படியே இருந்தது. மிகவும் அமைதியாகவும், எந்தவித பெரிய அலங்காரமும் இல்லாமல் இருந்த அந்த ஆலயம் மனதிற்கு அணுக்கமாக இருந்தது.

உள்ளே சுற்றிவிட்டு, அங்கிருந்து கிளம்பி அருகில் இருந்த பனிமய மாதா கோயிலுக்கு சென்றோம். கோயிலுக்கு எதிரே விற்று கொண்டிருந்த பனங்கிழங்கு, மசாலா பொரி, மாங்காய் சுண்டல் என்று நொறுக்கிவிட்டு, பனிமய மாதாவை பாராமல், அங்கிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் இருந்த ஒரு ஒடுக்கமான சந்திற்குள் சென்றோம். அந்த சந்தின் முடிவில், 1585ல் இந்த இடத்தில் இருந்த சிற்றாலயம் அருகிலேயே பனிமயமாதாவாக எழுப்பப்பட்ட போது, இந்த குருசடி நிர்மாணிக்கப்பட்டது என்று அருகிலேயே பொரித்து வைக்கப் பட்டிருக்கிறது. பிரெஞ்சு அரச சின்னமான பிளெயர் டே லில்ஸ் (லில்லி மலர்) குருசின் அனைத்து பக்கங்களிலும் இருக்கிறது. இதிலும் எண்ணெய் வடிந்து கொண்டிருந்தது. 

அங்கிருந்து பனிமய மாதாவை பார்த்துவிட்டதோடு எங்களது கிறிஸ்துவ தேவாலய பயணங்கள் முடிவிற்கு வந்தன. இரண்டு நாட்களில் பார்க்க முடிந்த அளவிற்கு பார்த்துவிட்ட திருப்தியோடு, மறுநாள் திருச்செந்தூரில் எனக்கு ஒரு  மொட்டையை போட்டுவிட்டு, மதுரைக்கு திரும்பினோம். 

மதுரையில் என் அம்மா கிறிஸ்துமஸிற்கு அண்ணாநகர் மாதா கோவிலில் மெழுகுவர்த்தி ஏற்றுவது வழக்கம் என்று சொல்லவே, அன்று மாலை அங்கே சென்றோம். நமக்கு மாரியம்மாவும், மரியன்னையும் ஒன்றுதானே?  

அறியப்படாத கிறிஸ்துவமும், அய்யனார் கதையும் - 4

மணப்பாடு.

தூத்துக்குடியில் இருந்து 60 கி.மீ தூரத்தில் மணப்பாடு இருக்கிறது. இந்த முறை கூகுளாண்டவரின் துணை வேண்டாம் என்று நினைத்து, நாங்களே நேராக திருச்செந்தூர் ரோட்டிற்கு வந்துவிட்டோம். 

மணப்பாடு போர்த்துகீசியர்கள் தமிழக கடற்கரைகளில் முதலில் வந்திறங்கிய இடங்களில் ஒன்று. அதற்கு மேலும் புனித சவேரியார் இங்குதான் 1542ல் மணப்பாட்டிற்கு வந்து முத்துகுளித்துறை பகுதிகள் முழுவதிலும் ஊழியம் செய்திருக்கிறார். கோவா சென்றிருந்த போது அங்கிருக்கும் போம் ஜீசஸ் பேராலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் சவேரியாரின் உடலை பார்த்திருந்தோம். இந்த முறை அவர் ஊழியம் செய்த இடங்களை பார்க்க சென்றோம்.



மணப்பாடு சற்றே பெரிய கிராமம். ஆனால் இங்கிருக்கும் தேவாலயங்கள் மிகவும் அழகானவை. கிட்டத்தட்ட ரோமை கத்தோலிக்கர்கள் நிறைந்து இருக்கும் இந்த கிராமத்தில், இருக்கும் பெரிய தேவாலயங்கள் கட்டாயம் பார்க்க வேண்டியவை.

நாங்கள் கிட்டத்தட்ட வெயில் உச்சிக்கு வரும் நேரத்தில் பரிசுத்த ஆவியின் தேவாலயத்தை வந்தடைந்தோம். பார்த்தவுடன் நம்மை ஈர்ப்பது இந்த ஆலயங்களின் நிறம்தான். பரிசுத்த ஆவி தேவாலயம் இந்த மண்ணின் நிறத்தில் மிகவும் கம்பீரமாக எழுப்பப்பட்டிருக்கிறது. 

உள்ளே நுழைந்தவுடன் மாதாவின் சொரூபத்துடன் மிகப் பெரிய அழகான பீடம் நம்மை கவர்கிறது. அருகிலேயே புனிதர்களின் சொரூபங்களும், சவேரியாரின் வாழ்வில் இருந்து சில நிகழ்வுகளும், சிலைகளாகவும், அழகான ஓவியங்களாகவும் வைக்கப்பட்டிருக்கிறது. பெரும் ஆலயத்தின் ஒரு பகுதியில் பீடத்திற்கு அருகே திருப்பண்டங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஜெருசலேமில் இயேசுவை அறைந்த உண்மையான மரசிலுவையின் துண்டு ஒன்று, சவேரியாரின் விரல்களில் ஒன்று, இன்னமும் சில புனிதர்களின் துணிகளின் துண்டுகள் போன்ற பலவும் வைக்கப்பட்டிருக்கிறது. திருவிழாவின் போது இவற்றை ஊர்வலமாக எடுத்து செல்வார்களாம்.


ரோமை கத்தோலிக்கத்தின் நம்பிக்கைகள் பலவற்றையும் நாம் எப்படி வேண்டுமென்றாலும்  எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த முத்துகுளித்துறை மக்கள் இந்த நம்பிக்கைகளுக்கு பதிலாக கல்வியும், மருத்துவமும் பெற்றார்கள். இங்கும் பெரிய பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் பார்க்க முடிகிறது. இங்கு தண்ணீர் வசதியை நூறு வருடங்களுக்கு முன்பே  செய்து கொடுத்து, அதை திருநெல்வேலி கலெக்டர் திறந்து வைத்ததாக ஒரு கல்வெட்டை கோயிலுக்கு வெளியே பார்த்தேன். 

அருகிலேயே புனித ஜேம்ஸ் பேராலயம் இருக்கிறது. அதற்கு செல்லும் வழியில் மீனவர்கள் சிலர் உரக்கப்பேசி சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். 

இன்னமும் பெரியதாக கடல் நீல நிறத்தில் இந்த தேவாலயம் அமைதியாக இருக்கிறது. அதை பார்த்து விட்டு, அருகில் இருக்கும் குன்றில் எழுப்பப்பட்டிருக்கும் புனித சிலுவை ஆலயத்திற்கு சென்றோம். இது சவேரியாரின் வருகைக்கு முன்னே  எழுப்பப்பட்ட ஆலயம் என்று  தெரிகிறது. 

இந்த ஆலயத்தின் அருகிலேயே சவேரியார் இங்கே வசித்ததாக நம்பப்படும் குகை ஒன்றும் இருக்கிறது. நாங்கள் சென்றவுடன் அங்கிருந்த பெரியவர் ஒருவர் குகையை திறந்து காட்டினார். வெளியே மிகுந்த வெப்பமாக இருந்த நேரத்தில், குகை மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. மிகவும் சிறிய  குகையில் ஒரு சிலுவையும் இருக்கிறது. குகையில் ஒரு நன்னீர் கிணறும் இருக்கிறது. அதில் ஒரு வாளி நீரை எடுத்து எங்களுக்கு குடிக்க கொடுத்தார்.



இங்கும் கடலை நோக்கியும், கடலை ஒட்டியிருக்கும் மணப்பாடு கிராமத்தை நோக்கியும் பார்த்தவாறு ஒரு குருசும் இருக்கிறது. இதுவும் சற்றே வளைந்த கூனன் குருசாகவே இருக்கிறது. இதையும் சவேரியார் இங்கே வைத்ததாக அந்தப் பெரியவர் கூறினார். 



அங்கிருந்து கீழே மீண்டும் வந்து, மணப்பாட்டில் இருந்து கிளம்பினோம். வழியிலேயே இருந்த கருவாட்டு கடையில் நெய் மீன் கருவாடும் வாங்கி கொண்டு, உவரியை நோக்கி சென்றோம்.

உச்சி வேளையில் உவரியை  அடைந்தோம். புனித அந்திரேயா ஆலயத்தில் கிறிஸ்துமஸிற்கான ஆராதனையின் ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. சில நடுத்தர வயது பெண்களும், சிறுமிகளும் இசையுடன் பாடல்களை பாடிக் கொண்டிருந்தார்கள். சிறிது  நேரம் கேட்டு கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். 

உவரியில் இருந்த மற்றொரு ஆலயம் மூடியிருந்தது. எனவே அங்கேயே ஒரு சிறிய கடையில் மீன்குழம்புடன் சாப்பிட்டுவிட்டு இடையன்குடியை நோக்கி கிளம்பினோம்.

அறியப்படாத கிறிஸ்துவமும், அய்யனார் கதையும் - 3

நாலுமாவடி.

என்னுடைய முன்னோர்களில் ஒருவர் தேரிக்காட்டில் இருந்து பிடிமண்ணை எடுத்து வந்து சிவகாசியில் ஒரு கோயிலை எழுப்பினார். பாதமுத்து அய்யனார் கோவில்தான் எங்களது குலதெய்வ கோயில் (அதனாலேயே என்னுடைய பெயர் முத்து என்று வைக்கப்பட்டது.). ஆனால் பிடிமண் எடுத்து வந்த கோயில் எதுவென்று இப்போது எவருக்கும் சரியாக நினைவில்லை. இந்த பயணம் அந்தப் பக்கமாக செல்கிறேன் என்று தெரிந்தவுடன், எனது பெரியம்மா ஒருவர் நாலுமாவடியில்தான் அந்தக் கோயில் இருப்பதாக கூறியதாக என் அம்மா தெரிவித்தார். 

நாலுமாவடியில் இரண்டு கோயில்கள் இருப்பதாக கூகுள் கூறியது. ஒன்று பாதக்கரையான் கோவில். இன்னொன்று முத்து சாஸ்தா கோயில். ஆனால் முத்து சாஸ்தா கோயில் தேரிக்காட்டிற்குள் இருந்தது. அம்மாவிடம் விசாரித்த போது பாதக்கரையான் கோயில்தான் என்று உறுதியாக கூறினார். எனவே பாதக்கரையான் கோயிலுக்கு செல்வது என்று முடிவானது.

குறும்பூருக்கு மிக அருகிலேயே நாலுமாவடி இருக்கிறது. அங்கே ஆத்தூர் என்ற இடத்தில் பாதக்கரையான் கோயில் இருப்பதாக கூகுள் காட்டியது. ஒடுக்கமாக சென்று கொண்டிருந்த சாலையில் சென்று கொண்டிருந்தோம். 'அம்பேத்கர் கோட்டடா' என்று பெரிய எழுத்துக்களில் எழுதியிருந்த பாலத்தைக் கடந்தவுடன் வயல் வெளி ஆரம்பித்தது. சாலை மறைந்து கிட்டத்தட்ட வயல் வரப்பாக மாறிக்கொண்டிருந்தது. நானும் காரை சர்க்கஸில் ஓட்டுவது போல ஒட்டிக் கொண்டிருந்தேன். இன்னமும் சிறிது தூரத்தில் சாலை இல்லாமல், தரையில் முழுவதுமாக புதர் மண்டி இருந்தது. அதன் முடிவில் ஒரு பம்ப் செட் அறை மட்டுமே இருந்தது. கூகுள் இன்னமும் 100 மீ செல்ல வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தது. இன்னமும் நூறு மீட்டரில் நானும், என் மனைவியும், காரும் வயல்காட்டில் உழுது கொண்டிருந்திருப்போம். சிறிது தூரம் பின் வந்து, மிகவும் சிரமப்பட்டு அங்கே காரை திருப்பி வந்த வழியே செல்ல ஆரம்பித்தோம். பாதகரையானை பார்ப்பது இயலாது என்றே தோன்றியது. 

அப்போது வயல்காட்டில் உரம் தெளித்து கொண்டிருந்த ஒருவரை பார்த்தோம். அவரிடம் கோயில் எங்கே என்றவுடன், நாங்கள் வயல்பாதையில் நுழைந்த இடத்தில் மரங்களிடையே இருந்த சிறிய கோயிலை காட்டினார். இதை எப்படி பார்க்காமல் விட்டோம் என்று நினைத்துக் கொண்டே அங்கே சென்றோம்.

மிகவும் சிறிய கோயில். எந்த சிலைகளும் இல்லை. மண் பீடங்கள் மட்டுமே இருந்தன. ஓரிடத்தில் அய்யனார் சிலையும், குதிரைகள் சிலையும் இருந்தது. பீடங்களும் சமாதியை போல இருந்தன. அது மட்டுமல்லாமல், தரையில் பாத சுவடுகள் இருந்தது போல வைத்திருந்தார்கள். அதற்கு மாலையும் இடப்பட்டிருந்தது. சில பீடங்களில் வேட்டியும், சிலவற்றில் சேலையும் சுற்றப்பட்டிருந்தது. கேட்டு தெரிந்து கொள்ள எவரும் அங்கில்லை. அருகில் இருந்த தண்ணீர் தொட்டி ஒன்றில் மட்டுமே பாதக்கரையான் கோயில் என்று எழுதியிருந்தது. 

பாதக்கரையானின் கதையை பின்னர் படித்து தெரிந்து கொண்டேன். ஆனாலும் வயற்காட்டின் நடுவே இருந்த அந்தக் கோயிலும், அதில் இருந்த பீடங்களும் எதோ ஒரு விதத்தில் மனதை விட்டு அகலவில்லை. அந்தப் பகுதியில் வாழ்ந்து, எந்த விதத்திலோ அந்த பகுதிக்கு பெரிய உதவி செய்து, மக்களின் மனதில் இருப்பவராகவே பாதக்கரையான் தோன்றுகிறார். அங்கே சமாதி இருக்கிறதோ அல்லது அவை வழிபடும் பீடங்களோ, எதுவாக இருந்தாலும், அந்த கோவிலின் அமைப்பும், அது இருக்கும் இடமும் மறக்கமுடியாதது.

அருகில் முத்து சாஸ்தா கோயில் இருப்பதாக தெரிந்ததால், அதையும் கூட பார்க்கலாம் என்று அங்கிருந்து கிளம்பினோம். இந்த முறை கூகுளை நம்பாமல், விசாரித்து செல்வது என்று முடிவு செய்தோம். சிறிது தூரம் சென்றவுடன், சாலையோரம் நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களிடம் கேட்டோம். சிறிது தூரத்தில் இருக்கும் பாதக்கரையான் கோயிலை தாண்டி சென்றவுடன் வரும் என்றார்கள். சிறிது குழம்பித்தான் போனோம். இப்போதுதானே பாதக்கரையான் கோயிலில் இருந்து வருகிறோம், இந்தப் பாட்டி இனிதான் கோயில் வருகிறது என்கிறாரே என்று அவரிடமே அதைக் கேட்டோம். 

அவரும் நாலுமாவடியில் மூன்று பாதக்கரையான் கோயில்கள் இருப்பதாகவும், அதில் முதல் கோயிலைதான் நாங்கள் பார்த்திருப்பதாக தெரிவித்தார். இன்னமும் இரண்டு கோயில்கள் அங்கேயே சற்று தள்ளி இருப்பதாகவும் தெரிவித்தார். எனவே அவை இரண்டையும் பார்த்துவிட முடிவு செய்தேன். அந்த பாட்டியிடம், யார் இந்த பாதக்கரையான் என்று கேட்டேன். 'அவன் இந்த பக்கமா சுத்திக் கொண்டிருப்பான். யாரும் பார்த்ததில்லைபா.' என்றார். அதில் நிறைய உண்மை இருப்பதாக தெரிந்தது.

இரண்டாவது பாதக்கரையான் கோயில் மிகுந்த படாடோபத்துடன் இருந்தது. லெஜெண்ட் சரவணாவின் கைங்கர்யத்தில் கோயில் மிகவும் பெரிதாக எழுப்பப்பட்டு, அய்யனார் சிலைகள் எல்லாம் புத்தம் புதிதாக இருந்தன. அத்துடன் சிவன், பெருமாள், கிருஷ்ணன், விநாயகர் என்று பலரும் அய்யனாரை சுற்றி இருந்தார்கள். இந்த கோயிலில்தான் கொடை முதலிய திருவிழாக்கள் நடைபெறுவதாக சொன்னார்கள். முதலாவது கோயிலில் இருந்த உணர்வு, என்ன செய்தாலும் இங்கே வரவில்லை. கோயிலுக்கு அருகிலேயே லெஜெண்ட் சரவணாவின் மண்டபமா, வீடா என்று தெரியாத ஒரு நாலு அடுக்கு மாளிகை இருந்தது. 

மூன்றாவது கோயில் வெளியே கேட் போட்டு மூடப்பட்டிருந்தது. அதனால் பார்க்க முடியவில்லை. இந்தக் கோயில்களில் இருந்துதான் பிடிமண் எடுக்கப்பட்டதா என்றெல்லாம் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் இந்தப் பகுதியில் இருக்கலாம் என்ற உணர்வே போதுமானதாக இருந்தது. 

அங்கிருந்து மூக்குப்பீறி செல்வதாக திட்டம். ஆனால் நாசரேத் கோயில் 7 மணிக்கு மூடப்பட்டுவிடும் என்று தெரிந்ததால், அங்கே நேராக சென்று விடலாம் என்று முடிவு செய்துவிட்டோம். 

நாசரேத்.

என்னுடைய பெரிய அய்யாம்மை (என் அய்யம்மாவின் அண்ணன் மனைவி) நாசரேத்தை சேர்ந்தவர். நானும் திருநெல்வேலி பொறியியல் கல்லூரியில் படித்த காலத்தில் இரண்டொரு முறை நாசரேத் சென்று வந்திருக்கிறேன். இந்த முறை அங்கிருக்கும் புனித யோவான் பேராலயத்தை காணவே சென்றோம்.

 மாலை ஆறேகால் மணிக்கு அங்கு சென்றோம். வழக்கம் போலவே ஆலயம் அருகில் இருந்த பள்ளியின் மைதானத்தில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தோம். இங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கான தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தன.தோரணங்களும், வண்ண விளக்குகளும் ஜொலித்துக் கொண்டிருந்தன. ஆறரை மணிக்கு ஆராதனை என்று சொன்னவுடன், அதை சிறப்பித்து விட்டு செல்வது என்று முடிவு செய்தோம்.

220 வருட வரலாறு கொண்ட இந்த ஆலயம், முதலில் பனையோலை வேய்ந்த சிறிய சர்ச்சாக இருந்து, அளவிலும், வருமானத்தில் பெரிதாக, ஆக பெரிதாக எடுத்து கட்டப்பட்டு, இன்று ஒரு பேராலயமாக இருக்கிறது. சிஎஸ்ஐ ஆலயமாக இருந்தாலும், கோதிக் முறையில், பெரும் வளைவுகளுடன் எழுப்பப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய கோயில் மணிக்கான கோபுரமும் இருக்கிறது. சுற்றிலும் வண்ணக்கண்ணாடிகளில் இயேசுவின் வாழ்க்கை சொல்லப்பட்டிருக்கிறது.

சரியாக ஆறரை மணிக்கு துவங்கிய ஆராதனை அரைமணி நேரம் நடந்தது.மொத்தம் 30-40 பெண்களும், 15 ஆண்களும் மட்டுமே ஆராதனைக்கு வந்திருந்தார்கள் (எங்களையும் சேர்த்து). சரியாக ஏழு மணிக்கு ஆராதனை முடிந்தவுடன், கோயில் விளக்குகள் அணைக்கப்பட்டு, மூடுவதற்கான வேலை தொடங்கியது.

நாங்களும் அங்கிருந்து மீண்டும் தூத்துக்குடிக்கு கிளம்பினோம். மீண்டும் கூகுள் 'வாகைக்குளம் ஸ்ரீவைகுண்டம் எக்ஸ்பிரஸ் ரோடு' என்று காட்டிய வழியை நம்பி சென்று பெரிதாக பல்பு வாங்கினோம். எக்ஸ்பிரஸ் ரோட்டில் வேலை நடந்து கொண்டிருந்ததால் சாலை முழுவதும் தோண்டப்பட்டு, கல்லும், மண்ணுமாக இருந்தது. ஒருவழியாக தூத்துக்குடி ஆண்டவர் நைட் கிளப்பிற்கு பரோட்டா சாப்பிட வந்து சேர்ந்தோம். அங்கும் சர்வர்களிடையே நடைபெற்ற (உண்மையான) ரோஷமான குத்துச்சண்டையில், எங்கள் மீது குத்து விழுந்து விடாமல் தப்பி, இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு அறைக்கு வந்து சேர்ந்தோம்.  

அறியப்படாத கிறிஸ்துவமும், அய்யனார் கதையும் - 2

புன்னைக்காயல்.

கூகிளாண்டவரின் உதவியால் இப்போதும் ஆத்தூர் பாலத்தை தாண்டியவுடன் இடது பக்கத்தில் இல்லாத தெருவில் திரும்ப முயன்று, பாலத்தை சுற்றி வந்தேன். ஒருவழியாக புன்னைக்காயல் செல்லும் பாதையை கண்டு செல்ல ஆரம்பித்தோம்.

தாமிரபரணியில் நீர் நிறைந்து ஓடிக் கொண்டிருந்தது. ஏரல் சேர்மா கோயில் சிறிது தூரத்தில்தான் இருந்தது. செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் நேரமில்லை என்பதால் புன்னைக்காயல் நோக்கி சென்று கொண்டிருந்தோம்.

புன்னைக்காயல் செல்லும் பாதை மிகவும் சேதமடைந்து இருந்தது. மெதுவாகவே செல்ல வேண்டியிருந்தது. காயல் பகுதியின் நில அழகை பார்த்து மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். சுள்ளென்று உரைக்கும் வெயில், சுற்றிலும் தாமிரபரணி நீர், ஒரு பக்கம் அலையடிக்கும் கடல், எங்கும் கடல் மணல் மிகுந்த சூட்டோடு இருந்த இடத்தின் மக்களும் அது போலவே மிகுந்த கரடுமுரடாகவும், அதைவிட மிகுந்த உதவி புரிபவர்களாகவும் இருக்கிறார்கள். 

தூய ராஜகன்னி மாதா ஆலயத்திற்கு முதலில் சென்றோம். தமிழக கடற்கரையில் போர்த்துகீசியர்கள் முதலில் தடம் பதித்த இடங்களில் புன்னைக்காயலும் ஒன்று. பல்வேறு தமிழ் மொழி புத்தகங்களை எழுதிய ஹென்றி ஹென்றிக்ஸ் வாழ்ந்த இடம். தமிழகத்தின் முதல் அச்சுக்கூடம் இருந்த இடமும் இதுதான்.

இவ்வளவு பெருமைகளை தாங்கி கொண்டிருக்கும் புன்னைக்காயல் இன்று சற்றே பெரிய கிராமமாக, அதன் பழம்பெருமையை பறை சாற்றும் எந்த அடையாளமுமின்றி இருந்து வருகிறது. 

நாங்கள் சென்ற எல்லா தேவாலயங்களை ஒட்டி ஒரு மருத்துவமனையும், பள்ளியும் கட்டாயம் இருந்தது. மக்களுக்கு கல்வியையும், சுகாதாரத்தையும் வழங்குவதற்கு பாதிரிகள் எத்தகைய முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதற்கு இவை இன்னமும் சாட்சியாக இருக்கின்றன. தேவாலயங்களுடன் அவர்கள் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் சேர்த்தே கட்டியிருக்கிறார்கள். அப்போது தமிழகமெங்கும் இருந்த அரசர்களும், ஜமீன்தார்களும் தாங்கள் வரியாக பெற்ற மக்களின் பணத்தை என்னதான் செய்தார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. 

470 வருட பழமையான தூய ராஜகன்னி மாதா ஆலயத்திற்கு அருகிலும் பள்ளி ஒன்று இருக்கிறது. பள்ளி முடியும் நேரத்தில் நாங்கள் சென்றதால், கோயிலுக்கு முன்னிருந்த மைதானம் முழுவதும் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அருகிலேயே இருந்த சவேரியார் தேவாலயத்திற்கு வழி கேட்டு சென்றால், அது மூடப்பட்டிருந்தது. மறுநாள் காலையில்தான் திறப்பார்கள் என்றதால், அங்கிருந்து கிளம்பலாம் என்று நினைத்தோம்.

மாலையாகிவிட்டதால் அங்கிருந்த சிறிய கடையில் டீ குடிக்க நின்றோம். ராமேஸ்வரத்தில் நல்ல மழை என்று காலையில் பார்த்திருந்தேன். எனவே கடைக்காரரிடம் 'இங்கெல்லாம் மழை பெய்யாதா?' என்று கேட்டேன். என்னருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் 'இங்கெல்லாம் பெய்யாது. சவேரியார் வாக்கில்ல.' என்றார். அது என்ன சவேரியார் வாக்கு என்று கேட்டதற்கு, சவேரியார் மரணப்படுக்கையில் புன்னைக்காயல் மக்களிடம், அவர்களது கிராமத்தை தீயும், வெள்ளமும் ஒன்றும் செய்து என்று வாக்கு கொடுத்திருக்கிறாராம். அதனால் புன்னைக்காயலில் எப்போதும் புயல், மழை இருக்காது என்றார். கொஞ்சம் வெயிலை குறைவாக அடிக்க சொல்லியிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டே கிளம்ப நினைக்கையில், பக்கத்தில் இருந்த தெருவில் ஒரு குருசடி இருப்பதாகவும், அதையும் பார்த்துவிட்டு செல்லுங்கள் என்றும் கூறினார்.

ஊரே கிறிஸ்துமசிற்கு தயாராகிக் கொண்டிருந்தது. அனைவரும் தோரணம் கட்ட, வண்ண விளக்குகள் கட்ட, புது துணிகள் வாங்க என்று பரபரப்பாக இருந்தார்கள். நாங்களும் அருகில் இருந்த தெருவிற்கு சென்றால், அங்கும் ஒரு கூனன் குருசு இருந்தது. பீடத்தின் மேல் இருந்த அதில் இருந்து வடியும் எண்ணையை பிடிக்க கீழே சிறு மாடமும் இருந்தது. பழமையான குருசா அல்லது சமீபத்திய ஒன்றா என்று தெரியவில்லை. அங்கிருந்தவர்கள் அது பழமையானது என்றே சொன்னார்கள். 

அங்கிருந்து அடுத்து குரும்பூர் கிளம்பினோம்.

போர்த்துகீசியர் வருகைக்கும் முந்தைய தேவாலயமாக கருதப்படும் விசேந்தியப்பர் ஆலயத்தை நோக்கியே எங்கள் பயணம் இருந்தது. திருச்செந்தூர் ரோட்டில் இருந்து பிரியும் சிறிய பாதையில் பயணத்தை தொடர்ந்தோம். ஆனால், இங்கும் விசேந்தியப்பர் ஆலயம் மூடப்பட்டிருந்தது. வெளியில் இருந்து பார்த்துவிட்டு, அய்யனாரைத் தேடி நாலுமாவடிக்கு கிளம்பினோம்.

அறியப்படாத கிறிஸ்துவமும், அய்யனார் கதையும் - 1

 ஆய்வாளர் நிவேதிதா லூயிஸின் 'அறியப்படாத கிறிஸ்துவம்' புத்தகத்தை வாசித்ததில் இருந்து அதில் இருந்த சில இடங்களை சென்று பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது. குறிப்பாக, தூத்துக்குடியை சுற்றியிருந்த இடங்கள். அதற்கு இரண்டு காரணமுண்டு.

தூத்துக்குடி என்னுடைய சிறுவயதில் இருந்து நான் சென்று வரும் நகரம். என் அய்யப்பாவின் அக்கா அங்கேதான் இருந்தார். இன்றும் அங்கே எனது மாமாக்கள் மற்றும் தங்கைகள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால் இப்போது அனைவரிடமும் தொடர்பு விட்டுப்போய் விட்டது. இரண்டாவதாக, தேரிக்காடு. மூன்று தலைமுறைக்கு முன்னர் என்னுடைய பாட்டன், பூட்டன்கள் தேரிக்காட்டை சுற்றியிருந்த காடுகளில் பனையேறியும், கள்ளு இறக்கியும், கருப்பட்டி காய்ச்சியும்தான் வாழ்ந்து வந்தார்கள். என் அப்பா வழித் தாத்தாவின் அப்பாதான் அங்கிருந்து சிவகாசி வந்து மளிகை கடை வைத்தது. அவர் அப்படியான ஒரு முடிவை எடுக்காவிட்டால் நான் இருந்திருப்பேனா என்று பல முறை யோசித்திருக்கிறேன். தேரிக்காட்டில் அலைந்து கொண்டிருக்கும் பல அய்யனார்களில், என்னுடைய அம்மாவழி பாட்டியின் குலதெய்வமான கற்குவேல் அய்யனார் கோவிலுக்கும் சென்று வரலாம் என்று ஒரு எண்ணம். 

கிறிஸ்துமஸை ஒட்டிய நாட்களில் தூத்துக்குடி நகரம் கோலாகலமாக இருக்கும் என்பதால் அதையும் பார்த்துவிட தோன்றியது. இந்தப் பகுதியில் தூத்துக்குடி மட்டுமே பெரிய நகரம் என்பதால் அங்கேயே தங்கிவிட முடிவு செய்தேன். மதுரையில் இருந்து வாடகை கார் ஒன்றை (ஸெல்ப் டிரைவ்) எடுத்துக் கொண்டு, என் மனைவியுடன் காலையில் கிளம்பினேன். இது போன்ற பயணங்களுக்கு சரியான துணை தேவை. என் மனைவியை போன்ற துணை வெகு அரிதாகவே அமையும்.

எங்களது குலதெய்வம் பாதமுத்து அய்யனாரின் கோயில் சிவகாசியில் இருக்கிறது. தேரிக்காட்டில் இருக்கும் கோயில் ஒன்றில் இருந்து பிடிமண் எடுத்து வந்து கட்டப்பட்ட கோவில் இது. நாங்கள் கிளம்பிய அன்று காலை, என் அம்மா தேரிக்காட்டிற்கு அருகில் நாலுமாவடியில் அந்தக் கோவில் இருப்பதாக எனது பெரியம்மா ஒருவர் கூறியதாகவும், ஆனால் எந்த கோவில் என்று தெரியாது என்றும் கூறினார். எனவே அந்தக் கோவிலை கண்டறிய முயலலாம் என்றும் முடிவு செய்து கொண்டேன். எங்களது பயணம் தொடங்கியது.


ஜேசு கோவில், பழையகாயல்.

தூத்துக்குடியை சென்றடைந்தவுடன், அறையில் சாமான்களை வைத்து விட்டு, அருகில் இருந்த பிரேமா மெஸ்ஸில் மீன்குழம்பு சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். 

'அறியப்படாத கிறிஸ்துவம்' நூலில் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களின் அட்ச, தீர்க்க ரேகைகள் கொடுக்கப்பட்டிருந்தன என்பதால் அந்த இடங்களை வரைபடத்தில் கண்டறிவது எளிதாகவே இருந்தது. ஆனால் அந்த இடங்களை சென்றடைவது இன்னொரு கதை.

நான் அந்த இடத்தின் ஆயங்களை கூகிள் வரைபடத்தில் கொடுத்தவுடன், அது வழியை காட்டத்தான் செய்தது. ஆனால் அவை எல்லாம் கார் செல்லும் அளவிலான பாதைகள் இருக்கின்றனவா என்றெல்லாம் பார்த்து சொல்லப்படுவதல்ல. மாறாக அங்கு சென்று சேர ஒரு நிமிடம் குறைந்தாலும் அதையே பாதையாக காட்டுகிறது. நகரங்களில் மிகுந்த துல்லியமாக இருக்கும் வரைபட பாதைகள், கிராமங்களில் ஒரு குத்துமதிப்பாக மட்டுமே சரியாக இருக்கின்றன. இந்தப் பயணம் முழுவதும் கூகிளின் துணையோடு நான் செல்ல திட்டமிடாத பல இடங்களுக்கும் செல்ல சேர்ந்தது. 

பழையகாயலுக்கு செல்லும் பாதையும் அப்படியே அமைந்தது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் இருப்பதை அடைய, கூகுளை என்ன பல கிராமங்களுக்குள் சுற்றலில் செலுத்திவிட்டது. இறுதியாக சென்ற சில கிலோமீட்டர்கள் ஒருபக்கம் முழுவதும் கருவேலம் செடிகள் அடர்த்தியாக வளர்ந்து சாலையை மறைத்திருந்தது. எதிரே ஒரு இரண்டு சக்கர வாகனம் வந்தாலும், எந்தப்பக்கத்திலும் இறங்க முடியாது. ஒருபக்கம் வயல், இன்னொரு பக்கம் பள்ளம். ஒருவழியாக திருச்செந்தூர் ரோட்டை சென்றடைந்தோம்.

மீண்டும் சாலையில் இறங்கி, பரந்து கிடக்கும் உப்பளங்களின் இடையே, காரின் சஸ்பென்ஷனை மட்டும் நம்பி தைரியமாக சென்றால் ஜேசு கோயிலை அடையலாம். 

தென் தமிழகத்தின் முதல் கிறிஸ்துவ கோயில்களில் ஒன்று இந்தக் கோயில். இங்கிருக்கும் கூனன் குருசுகளை பார்க்கவே இங்கு வந்தோம். போர்த்துகீசியர்கள் முதலில் தென் தமிழக கடற்கரைகளுக்கு வந்த பொழுது, அவர்கள் தங்களது மதத்தை பரப்புவதன் பொருட்டு, அவர்கள் இறங்கிய கடற்கரைகளில் மரச் சிலுவையை நட்டுவைத்தார்கள். அதை சுற்றியே கிறிஸ்துவர்களின் குடியிருப்புகள் தோன்றியிருக்க வேண்டும். (இது குறித்து புத்தகத்தில் விரிவாக இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் அங்கே வாசித்துக் கொள்ளலாம்.)




ஜேசு கோயில் மிகவும் சிறிய கோயில். ஒரு வளைவின் நடுவே இருக்கும் பீடத்தில் மரித்துக் கிடக்கும் இயேசுவின் சிலை இருக்கிறது. பீடத்தின் கீழே, இரு புறமும் கூனன் குருசுகள் இருக்கின்றன. ரோமை கத்தோலிக்க வழக்கத்தின் படியாக, இந்த மரகுருசுகளின் மீது பக்தர்கள் எண்ணையை விட்டு அபிஷேகம் செய்கிறார்கள். குருசில் இருந்து வடியும் எண்ணையை பல நோய்களுக்கும் மருந்தென கருதி எடுத்து செல்கிறார்கள். 

கோயிலின் நேரெதிரே, இப்போது வைக்கப்பட்டிருக்கும் கொடிக்கம்பத்தின் கீழே, பீடத்தின் மேலே மரத்தால் செய்யப்பட்ட கூனன் குருசு ஒன்று இருக்கிறது. இங்கும் எண்ணெய் அபிஷேகமும், வடியும் எண்ணெய்யை பிடிக்க கீழே சிறிய இடமும் இருக்கிறது. 

உள்ளே இருக்கும் இயேசு பீடமும், குருசுகளும் மட்டுமே முதலில் இருந்திருக்க வேண்டும். இப்போது இருக்கும் சிறு கட்டிடமும், சுற்றியிருக்கும் அறைகளுக்குப் பின்னர் கட்டப்பட்டவை. இன்று கோவிலில் ஒரு காவலாளி மட்டுமே இருக்கிறார். மொட்டை வெயிலில், அத்துவான காட்டில் இருக்கும் அங்கே வந்திருந்த எங்களை சற்று வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு முறை கோவிலை சுற்றி வந்தவுடன், அவருடன் அமர்ந்து சிறிது பேசிக் கொண்டிருந்தோம்.

அருகிலேயே ஒரு பாட்டிம்மாவும், அவரது பேரனுடன் இருந்தார். பதினைந்து வயது மதிக்கத்தக்க அவரது பேரன் படுத்துக் கொண்டிருந்தான். காவலாளி பிடி கொடுக்காமல் பேசிக் கொண்டிருந்தார். கோவில் பற்றிய எந்த விவரங்களும் எங்கும் இல்லை. அவருக்கும் தெரியவில்லை. மறுநாள் சாமியார் வந்து பூசை போடுவார் என்றும், மற்றபடி பழையகாயிலில் இருக்கும் பரிபூர்ண மாதா கோவிலில்தான் அனைவரும் இருப்பார்கள் என்றார். 

அவரது பெயரை கேட்டபோது, எதற்கு கேட்கிறேன், என்ன விஷயம் என்றெல்லாம் கேட்டுவிட்டு, அது முக்கியமில்லை என்று சொல்லிவிட்டார். இப்போது பாட்டிம்மா பேசினார். தானும் அவரிடம் ஏழு நாட்களாக பெயரை கேட்பதாகவும், அவர் பெயரை சொல்ல மறுப்பதாகவும் கூறினார். பாட்டிம்மா உவரியில் இருந்து வந்திருப்பதாகவும், தன்னுடைய பேரனுக்கு சிறிது உடல்நிலை சரியில்லை என்பதால், ஜேசு கோவிலில் பத்து நாட்கள் இருந்து போவதாக நேர்ந்து கொண்டிருந்ததால், அங்கே வந்து தங்கியிருப்பதாகவும், இன்னமும் இரண்டு நாட்களில் கிளம்பப் போவதாகவும் தெரிவித்தார். அங்கேயே சமையல் செய்து கொண்டிருப்பதாகவும் கூறினார். 

சற்று தொலைவில் கடல் அலைகளின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அங்கிருந்து புன்னைக்காயல் நோக்கி கிளம்பினோம்.    

The Discovery and Conquest of Peru - Zarate.

பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...