நாலுமாவடி.
என்னுடைய முன்னோர்களில் ஒருவர் தேரிக்காட்டில் இருந்து பிடிமண்ணை எடுத்து வந்து சிவகாசியில் ஒரு கோயிலை எழுப்பினார். பாதமுத்து அய்யனார் கோவில்தான் எங்களது குலதெய்வ கோயில் (அதனாலேயே என்னுடைய பெயர் முத்து என்று வைக்கப்பட்டது.). ஆனால் பிடிமண் எடுத்து வந்த கோயில் எதுவென்று இப்போது எவருக்கும் சரியாக நினைவில்லை. இந்த பயணம் அந்தப் பக்கமாக செல்கிறேன் என்று தெரிந்தவுடன், எனது பெரியம்மா ஒருவர் நாலுமாவடியில்தான் அந்தக் கோயில் இருப்பதாக கூறியதாக என் அம்மா தெரிவித்தார்.
நாலுமாவடியில் இரண்டு கோயில்கள் இருப்பதாக கூகுள் கூறியது. ஒன்று பாதக்கரையான் கோவில். இன்னொன்று முத்து சாஸ்தா கோயில். ஆனால் முத்து சாஸ்தா கோயில் தேரிக்காட்டிற்குள் இருந்தது. அம்மாவிடம் விசாரித்த போது பாதக்கரையான் கோயில்தான் என்று உறுதியாக கூறினார். எனவே பாதக்கரையான் கோயிலுக்கு செல்வது என்று முடிவானது.
குறும்பூருக்கு மிக அருகிலேயே நாலுமாவடி இருக்கிறது. அங்கே ஆத்தூர் என்ற இடத்தில் பாதக்கரையான் கோயில் இருப்பதாக கூகுள் காட்டியது. ஒடுக்கமாக சென்று கொண்டிருந்த சாலையில் சென்று கொண்டிருந்தோம். 'அம்பேத்கர் கோட்டடா' என்று பெரிய எழுத்துக்களில் எழுதியிருந்த பாலத்தைக் கடந்தவுடன் வயல் வெளி ஆரம்பித்தது. சாலை மறைந்து கிட்டத்தட்ட வயல் வரப்பாக மாறிக்கொண்டிருந்தது. நானும் காரை சர்க்கஸில் ஓட்டுவது போல ஒட்டிக் கொண்டிருந்தேன். இன்னமும் சிறிது தூரத்தில் சாலை இல்லாமல், தரையில் முழுவதுமாக புதர் மண்டி இருந்தது. அதன் முடிவில் ஒரு பம்ப் செட் அறை மட்டுமே இருந்தது. கூகுள் இன்னமும் 100 மீ செல்ல வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தது. இன்னமும் நூறு மீட்டரில் நானும், என் மனைவியும், காரும் வயல்காட்டில் உழுது கொண்டிருந்திருப்போம். சிறிது தூரம் பின் வந்து, மிகவும் சிரமப்பட்டு அங்கே காரை திருப்பி வந்த வழியே செல்ல ஆரம்பித்தோம். பாதகரையானை பார்ப்பது இயலாது என்றே தோன்றியது.அப்போது வயல்காட்டில் உரம் தெளித்து கொண்டிருந்த ஒருவரை பார்த்தோம். அவரிடம் கோயில் எங்கே என்றவுடன், நாங்கள் வயல்பாதையில் நுழைந்த இடத்தில் மரங்களிடையே இருந்த சிறிய கோயிலை காட்டினார். இதை எப்படி பார்க்காமல் விட்டோம் என்று நினைத்துக் கொண்டே அங்கே சென்றோம்.
மிகவும் சிறிய கோயில். எந்த சிலைகளும் இல்லை. மண் பீடங்கள் மட்டுமே இருந்தன. ஓரிடத்தில் அய்யனார் சிலையும், குதிரைகள் சிலையும் இருந்தது. பீடங்களும் சமாதியை போல இருந்தன. அது மட்டுமல்லாமல், தரையில் பாத சுவடுகள் இருந்தது போல வைத்திருந்தார்கள். அதற்கு மாலையும் இடப்பட்டிருந்தது. சில பீடங்களில் வேட்டியும், சிலவற்றில் சேலையும் சுற்றப்பட்டிருந்தது. கேட்டு தெரிந்து கொள்ள எவரும் அங்கில்லை. அருகில் இருந்த தண்ணீர் தொட்டி ஒன்றில் மட்டுமே பாதக்கரையான் கோயில் என்று எழுதியிருந்தது.
பாதக்கரையானின் கதையை பின்னர் படித்து தெரிந்து கொண்டேன். ஆனாலும் வயற்காட்டின் நடுவே இருந்த அந்தக் கோயிலும், அதில் இருந்த பீடங்களும் எதோ ஒரு விதத்தில் மனதை விட்டு அகலவில்லை. அந்தப் பகுதியில் வாழ்ந்து, எந்த விதத்திலோ அந்த பகுதிக்கு பெரிய உதவி செய்து, மக்களின் மனதில் இருப்பவராகவே பாதக்கரையான் தோன்றுகிறார். அங்கே சமாதி இருக்கிறதோ அல்லது அவை வழிபடும் பீடங்களோ, எதுவாக இருந்தாலும், அந்த கோவிலின் அமைப்பும், அது இருக்கும் இடமும் மறக்கமுடியாதது.அருகில் முத்து சாஸ்தா கோயில் இருப்பதாக தெரிந்ததால், அதையும் கூட பார்க்கலாம் என்று அங்கிருந்து கிளம்பினோம். இந்த முறை கூகுளை நம்பாமல், விசாரித்து செல்வது என்று முடிவு செய்தோம். சிறிது தூரம் சென்றவுடன், சாலையோரம் நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களிடம் கேட்டோம். சிறிது தூரத்தில் இருக்கும் பாதக்கரையான் கோயிலை தாண்டி சென்றவுடன் வரும் என்றார்கள். சிறிது குழம்பித்தான் போனோம். இப்போதுதானே பாதக்கரையான் கோயிலில் இருந்து வருகிறோம், இந்தப் பாட்டி இனிதான் கோயில் வருகிறது என்கிறாரே என்று அவரிடமே அதைக் கேட்டோம்.
அவரும் நாலுமாவடியில் மூன்று பாதக்கரையான் கோயில்கள் இருப்பதாகவும், அதில் முதல் கோயிலைதான் நாங்கள் பார்த்திருப்பதாக தெரிவித்தார். இன்னமும் இரண்டு கோயில்கள் அங்கேயே சற்று தள்ளி இருப்பதாகவும் தெரிவித்தார். எனவே அவை இரண்டையும் பார்த்துவிட முடிவு செய்தேன். அந்த பாட்டியிடம், யார் இந்த பாதக்கரையான் என்று கேட்டேன். 'அவன் இந்த பக்கமா சுத்திக் கொண்டிருப்பான். யாரும் பார்த்ததில்லைபா.' என்றார். அதில் நிறைய உண்மை இருப்பதாக தெரிந்தது.
இரண்டாவது பாதக்கரையான் கோயில் மிகுந்த படாடோபத்துடன் இருந்தது. லெஜெண்ட் சரவணாவின் கைங்கர்யத்தில் கோயில் மிகவும் பெரிதாக எழுப்பப்பட்டு, அய்யனார் சிலைகள் எல்லாம் புத்தம் புதிதாக இருந்தன. அத்துடன் சிவன், பெருமாள், கிருஷ்ணன், விநாயகர் என்று பலரும் அய்யனாரை சுற்றி இருந்தார்கள். இந்த கோயிலில்தான் கொடை முதலிய திருவிழாக்கள் நடைபெறுவதாக சொன்னார்கள். முதலாவது கோயிலில் இருந்த உணர்வு, என்ன செய்தாலும் இங்கே வரவில்லை. கோயிலுக்கு அருகிலேயே லெஜெண்ட் சரவணாவின் மண்டபமா, வீடா என்று தெரியாத ஒரு நாலு அடுக்கு மாளிகை இருந்தது.
மூன்றாவது கோயில் வெளியே கேட் போட்டு மூடப்பட்டிருந்தது. அதனால் பார்க்க முடியவில்லை. இந்தக் கோயில்களில் இருந்துதான் பிடிமண் எடுக்கப்பட்டதா என்றெல்லாம் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் இந்தப் பகுதியில் இருக்கலாம் என்ற உணர்வே போதுமானதாக இருந்தது.
அங்கிருந்து மூக்குப்பீறி செல்வதாக திட்டம். ஆனால் நாசரேத் கோயில் 7 மணிக்கு மூடப்பட்டுவிடும் என்று தெரிந்ததால், அங்கே நேராக சென்று விடலாம் என்று முடிவு செய்துவிட்டோம்.
நாசரேத்.
என்னுடைய பெரிய அய்யாம்மை (என் அய்யம்மாவின் அண்ணன் மனைவி) நாசரேத்தை சேர்ந்தவர். நானும் திருநெல்வேலி பொறியியல் கல்லூரியில் படித்த காலத்தில் இரண்டொரு முறை நாசரேத் சென்று வந்திருக்கிறேன். இந்த முறை அங்கிருக்கும் புனித யோவான் பேராலயத்தை காணவே சென்றோம்.
மாலை ஆறேகால் மணிக்கு அங்கு சென்றோம். வழக்கம் போலவே ஆலயம் அருகில் இருந்த பள்ளியின் மைதானத்தில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தோம். இங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கான தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தன.தோரணங்களும், வண்ண விளக்குகளும் ஜொலித்துக் கொண்டிருந்தன. ஆறரை மணிக்கு ஆராதனை என்று சொன்னவுடன், அதை சிறப்பித்து விட்டு செல்வது என்று முடிவு செய்தோம்.220 வருட வரலாறு கொண்ட இந்த ஆலயம், முதலில் பனையோலை வேய்ந்த சிறிய சர்ச்சாக இருந்து, அளவிலும், வருமானத்தில் பெரிதாக, ஆக பெரிதாக எடுத்து கட்டப்பட்டு, இன்று ஒரு பேராலயமாக இருக்கிறது. சிஎஸ்ஐ ஆலயமாக இருந்தாலும், கோதிக் முறையில், பெரும் வளைவுகளுடன் எழுப்பப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய கோயில் மணிக்கான கோபுரமும் இருக்கிறது. சுற்றிலும் வண்ணக்கண்ணாடிகளில் இயேசுவின் வாழ்க்கை சொல்லப்பட்டிருக்கிறது.
நாங்களும் அங்கிருந்து மீண்டும் தூத்துக்குடிக்கு கிளம்பினோம். மீண்டும் கூகுள் 'வாகைக்குளம் ஸ்ரீவைகுண்டம் எக்ஸ்பிரஸ் ரோடு' என்று காட்டிய வழியை நம்பி சென்று பெரிதாக பல்பு வாங்கினோம். எக்ஸ்பிரஸ் ரோட்டில் வேலை நடந்து கொண்டிருந்ததால் சாலை முழுவதும் தோண்டப்பட்டு, கல்லும், மண்ணுமாக இருந்தது. ஒருவழியாக தூத்துக்குடி ஆண்டவர் நைட் கிளப்பிற்கு பரோட்டா சாப்பிட வந்து சேர்ந்தோம். அங்கும் சர்வர்களிடையே நடைபெற்ற (உண்மையான) ரோஷமான குத்துச்சண்டையில், எங்கள் மீது குத்து விழுந்து விடாமல் தப்பி, இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு அறைக்கு வந்து சேர்ந்தோம்.
No comments:
Post a Comment