பொன்கொன்றை பூக்க வந்த பேய்மழை
My rating:
5 of 5 stars
"பொழுதுகளோடு நான் புரிந்த
யுத்தங்களை எல்லாம் முடித்துவிட்டு
உன்னருகே வந்தேன்"
என்ற தேவதேவன் வார்த்தைக்கு ஏற்ப பொழுதுகளோடு யுத்தம் புரியும் வாழ்வில் காதல் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. சமயவேல் முன்னுரையில் சொல்வது போல் காதல் கவிதைகள் எழுதுவது அருகிவிட்டது.
எனக்கும் ஒரு சிலரை தவிர தொடர்ச்சியாக காதல் கவிதைகள் (மட்டுமே) எழுதுபவர்கள் இப்போது இல்லை என்றே தோன்றுகிறது. அப்படி எழுதுபவர்களும் 'கிழக்கே சூரியன் உதித்தது - நீ வந்தாய்' என அபத்த களஞ்சியங்களாகவே இருக்கின்றனர்.
எனவே, ஸ்ரீவள்ளி முகநூலில் தொடர்ச்சியாக காதல் கவிதைகளை பதிப்பித்த போது அது ஒரு விதத்தில் மாறுதலாக இருந்தது. காதலில் இருக்கும் கணம் அபூர்வமானது. அந்த கணத்தை வார்த்தைகளில் வடிப்பது என்பது இன்னமும் அரிது. அதற்க்கு அந்த கணத்தை உணரும் மனமும் , அதை வெளியுறுத்தும் வார்த்தை பிரயோகமும் அவசியம். இவை இரண்டுமே ஸ்ரீவள்ளிக்கு வாய்த்திருக்கிறது.
"பொன்னென மலர்ந்த கொன்றை மணிஎனத்
தேம்படு காயா மலர்ந்த தோன்றியொடு
நன்னலம் எய்தினை புறவே!"
என்ற ஐங்குறுநூற்றின் வார்த்தைகளில் உருவான தலைப்பே இந்த கவிதைகளின் நவீன பழமையை வெளிக்கொணர்கிறது.
"தன் உறுதிமொழியை அவளிடம்
நெஞ்சை பிளந்து அரிந்து வைக்காமல்
மொட்டவிழ்க்கத்தான் தெரியுமா"
என்கிறது இந்த தொகுப்பின் பெயர் கொண்ட கவிதை. இந்த சொற்சிக்கனம்தான் காதலில் இருத்தல். எதையும் நிரூபிக்காமல் இருப்பது. இது காதலின் உறுதி உள்ளபொழுதே இருக்கும். இந்த தொகுப்பின் கவிதைகளும் அதன் இருப்பை கேள்வியுறுத்தாது காதலை கொண்டாடுகின்றன.
|
Love and Pain - Edvard Munch |
இந்த கவிதைகளில் சிலவற்றை முகநூலில் வாசிக்கும் போதே அவற்றின் சங்கத்தமிழ் கவிதைகளின் தொடர்ச்சி - உவமைகள், மொழி , பகுப்புகள் - என பலவும் நினைவுறுத்திக்கொண்டே இருந்தன. அதனாலோ என்னவோ ஒவ்வொரு கவிதை வாசிக்கும் போதும் அதன் திணை என்னவாக இருக்கும் என்றும் இதன் போல் வேறு கவிதை இருக்கிறதா என்றும் தோன்றிக்கொண்டே இருந்தது.
அன்னங்களும், நாரைகளும் தூது சென்ற சங்ககாதல் இப்போது அணில்களும் , சங்கிலியில் கட்டப்பட்ட குரங்குகளிடமும் உதவி கேட்கிறது. சங்கப்பாடல்களின் சித்திரங்கள் சிதைந்து நவீனத்தின் ஆன்மாக்களற்ற உலகம் முன்வருகிறது.
"மலையில்லாத பச்சையில்லாத
நீரோட்டமில்லாத
குருகில்லாத மீனில்லாத
பாதையில்
நீ வாகனத்தை செலுத்தும்போது
என்னை நினைக்க
என்னதான் இருக்கிறது நினைக்க"
என்பதில் காதலின் வழமையான விஷயங்கள் வெற்றிடமாக்கப்பட்டு நினைக்கப்படுதல் என்பதே அருகுகிறது. நினைவை தூண்டும் எந்த காரணியும் இல்லாமல் காதல் எனபது மட்டுமேயான உண்மையின் முன் இந்த கவிதைகள் வாசிக்க படுகின்றன.
அதுவே அடுத்த முரணை முன் கொணர்கிறது. காதல் என்பதை ஒரு விதத்தில் யதார்த்தத்தின் நேரெதிராய் நம் சமுகம் நிறுத்திவிட்டது. சங்கம் காட்டும் காதல் வயப்படும் சமூகத்தின் இந்த முரணே யோசிக்கத்தக்கது. காதல் மட்டுமே யதார்த்தமான உலகில் ஏனைய நெறிகளே யதார்த்தத்தின் முரணாய் நிற்கின்றன.
காதலின் காமத்தை உணர்த்தும் வரிகளில் ஸ்ரீவள்ளியின் தீவிரம் வெளிப்படுகிறது. 2 அல்லது 3 கவிதைகள் மட்டுமே ஆனாலும் ஒரு ஆழ்ந்த அனுபவத்தை இக்கவிதைகள் கொடுக்கின்றன.
"உன் உதடுகள் என் மருதாணியில் கூட்டிய அடர் சிவப்பு"
என்று செல்லும் 'என்னோடுதான் இருக்கிறாய்' களைத்து, களித்து , திளைத்து இவ்வாறு முடிகிறது.
"காதலின் எல்லா சந்தேகங்களும்
ஓர் இரவாவது
உறங்க செல்லட்டும்."
மனமொத்த காமம் காதலின் சந்தேகங்களை தற்காலிகமாக தள்ளி வைக்கிறது.
ஸ்ரீவள்ளியின் கவிதைகள் ஒவ்வொருவரின் வாசிப்பிலும் அவரின் அனுபவங்களின் வெளியீடாக மாறுவது இயல்பே. காதல் பெரும்பாலான நேரங்களில் அன்பை இறைஞ்சுதல் என்பதாகவே இருக்கிறது. இந்த இறைஞ்சுதல் நிராகரிக்க படும்போது மனம் ஸ்ரீவள்ளியின் வரிகளில்
"பிளாஸ்டிக் உரையைக் கவ்வியபடி
சக்கரங்களிலிருந்து தப்பித் திரியும் நாயாக
உன் நினைவை பற்றி அலையும்"
ஸ்ரீவள்ளியின் கவிதைகள் காதலை கொண்டாட்டமாக அன்றி அன்பின் நிமித்தம் கொள்ளப்படும் சுய வதையாகவே பார்க்கிறது. பெரும்பாலான கவிதைகள் அன்பின் நிராகரிப்பில் ஏங்கும் மனதின் வெளிப்பாடாகவே இருக்கிறது.
இருப்பினும் காதல் வேண்டும் மனம்
"முடியாத அன்பின் நித்ய நேரத்திக்கடன்"
என இடையறாது காதல் கொள்கிறது. இதுவே இப்புத்தகம் முழுவதுமான ஸ்ரீவள்ளியின் குரல்.