பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - 5 தாராசுரம்

தாராசுரம்

கும்பகோண விஜயத்தின் கடைசி கோயில் தாராசுரத்தில் இருக்கும் ஐராவதீஸ்வரர் கோயில். பல முறை சென்ற கோயில் ஆனாலும் ஒவ்வொரு முறையும் எதோ ஒன்று புதிதாக தெரிவதுதான் இந்த கோயிலின் சிறப்பு.

இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப் பட்ட இந்த கோயில் இப்போது UNESCO பாரம்பர்ய சின்னமாக இருக்கிறது. தஞ்சை பெரிய கோயில், அதனினும் சற்று சிறியதான கங்கை கொண்ட சோழபுரம், அதனினும் சற்று சிறியதான ஐராவதீஸ்வரர் கோயில். சோழர்களின் இந்த கோயில்கள் இன்றும் அவர்களின் சிற்ப கலைக்கு சாட்சியாய் இருக்கிறது.


சோழர்களின் எல்லா கோயில்களிலும் இருக்கும் கல்பலகணிகள், வேலைப்பாடுடைய தூண்கள், சிவ புராண கதை காட்சிகள், அந்த அழகான கோயில் விமானம், எல்லாம் உண்டு. ஒரு பெரும் லிங்கமும், விமான சுவற்றில் நாயக்கர் கால ஓவியங்கள், சுற்று பிரகாரங்களில் இருந்து ஒரு vantage view என்று இப்போதும் ஒரு கலைக்கூடமாகவே இருக்கிறது.

சிறிய கோயில் என்றாலும் இந்த கோயிலை சுற்றிப்பார்க்க ஒரு 3-4 மணி நேரம் வேண்டும். நான் ஒரு 2 மணி நேரம் இருந்தாலும் இன்னமும் பார்க்கவேண்டிய விஷயங்கள் இருப்பதாகவே தோன்றியது.
 
சில்பியின் புத்தகத்தில் இந்த கோயிலுக்கு ஒரு 20-30 பக்கங்களை ஒதுக்குகிறார். கையோடு எடுத்து போயிருந்ததால் அவர் குறிக்கும் சிற்பங்களை தேடி பார்க்க முடிந்தது. சில்பி இந்த கோயிலுக்கு வரும் போது இன்றைய பெரும்பாலான கோயில்களை போல கற்குவியல்களும் சிதைந்த சிற்பங்களுமாக இருந்ததாக வருத்தத்துடன் எழுதி இருப்பார்.


ASI நிர்வாகத்தில் இப்போது இந்த கோயில் நல்ல முறையில் பராமரிக்க படுகிறது. சுற்றிலும் புல் வெளி. நடுவில் கோயில். சோழர்கள் விட்டுப்போன நிலையிலேயே வைக்க பட்டிருக்கிறது.

நாயக்கர் ஓவியங்களின் வண்ணங்கள் கூட இன்னமும் தெளிவாகவே இருக்கிறது. இதை பார்க்கும் போதுதான் திருபுவனம், பழையாறை, பட்டீஸ்வரம் கோயில்களில் நாம் இழந்திருப்பது எவ்வளவு என்று தெரிகிறது. குறைந்தபட்சம் இந்த கோயில்கள் எல்லாவற்றிலும் நடக்கும் திருப்பணிகள் ASI மேற் பார்வையிலாவது நடக்க வேண்டும். இன்னமும் மேலாக இந்த கோயில்கள் எல்லாவற்றையும் ASI எடுத்துக் கொள்வது.

  கும்பகோணம் நகரில் காதலர்கள் செல்ல இடங்கள் இல்லையோ என்னவோ, தாராசுரம் கோயிலின் வெளிப்ரகார இருட்டுகளில் உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படலாம். எனக்கு ஏற்பட்டது. கோயில், புனிதம் என்பதை எல்லாம் தாண்டி பொது இடங்களில் எப்படி நடப்பது என்று யாருக்கும் தெரியாதது வருத்தமாகவே இருந்தது.

அந்த ஒரு விஷயம் தவிர கோயில் விஜயம் நன்றாகவே முடிந்தது. அன்றே இரவு பேருந்து பிடித்து சென்னை வந்து சேர்ந்தேன.

தாராசுரம் - எல்லா படங்களும் இங்கே -> https://plus.google.com/photos/104749384557340720796/albums/5875566552354623793?authkey=CPv6s77N372OKQ

No comments:

துப்பறியும் சிவாஜி

சிவாஜி கணேசனுடன் நேற்றிரவில் துப்பறிய சென்றிருந்தேன். சிவாஜி கணேசன் துப்பறியும் கதையின் நாயகர் அல்லர். அது ஜெயசங்கர் ஆகும். ஆனாலும...