பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - 1

சில்பியின் 'தென்னாட்டு செல்வங்கள்' கடந்த புத்தக  காட்சியில் வாங்கியது. சென்ற வாரம்தான் படிக்க/பார்க்க  ஆரம்பித்தேன். பார்க்க பார்க்க எல்லா இடங்கள் இல்லா விடினும் ஒரு சில இடங்கள் மட்டுமாவது போய் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. விடுமுறைக்கு வீட்டில் எல்லோரும் ஊருக்கு போய் விட உடனே தட்கலில் கும்பகோணத்திற்க்கு ரயில் ஏறினேன்.

கும்பகோணம் நிறைய  மாறி விட்டது. நிறைய மாறாமலும் இருக்கிறது. வட மாவட்டங்களில் நிலவும் பதற்றம் ஊரின் எல்லா இடங்களிலும் தெரிகிறது. நிறைய கடைகள் மூடி இருக்கிறது. பேருந்துகள் எல்லாம் 4-5ஆக போலீஸ்  பாதுகாப்புடன் செல்கின்றன. மாலை 6-7 மணிக்கெல்லாம் பேருந்துகள் நிறுத்த பட ஊருக்கு போக வழியில்லாமல் வழியில்லாமல் ஜனம் பேருந்து நிலையத்திலேயே படுத்து கிடக்கின்றனர்.

பழையாறை

சோழர்களின் பழைய தலை நகரான பழையாறை இப்போது 'கீழ பழையாறை'யாக, குடந்தையில் இருந்து 5-6 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. அதன் சோழ வரலாற்றின் ஒரே எச்சம் ஊரின்  ஓரத்தில்  இருக்கும் ' சோமேஸ்வரர்' கோயில்.

 

 பிற்கால சோழர்களின் தலை நகராக 'இஞ்சி சூழ் தஞ்சை' இருந்தாலும் சோழ மன்னர்கள் மற்றும் அவர்களது ராணிகளும் வாழ்ந்தது பழையாறையில் தான். அவர்களின் மாளிகைகளும் அந்த புரம்களும் இருந்தது. பிற்கால சோழர்கள் நசிந்து பாண்டியர்கள் தலை எடுத்த போது ஜடா வர்ம சுந்தர பாண்டியனால் இந்த நகரம் அழிக்க பட்டது. சுந்தர பாண்டியன் வெறுமனே அழிக்கவில்லை. எல்லா மாளிகைகளையும் தரை மட்டமாக்கி அந்த இடத்தில் எள்ளு விதைத்து உழுதான்.

பழைய பழையாறை இன்றைய  தாராசுரம், பட்டீஸ்வரம், நந்திபுர விண்ணகரம் மற்றும் ஆவூர் முதலிய ஊர்களை உள்ளடக்கியதாய் இருந்திருக்கலாம். அதன் கீழ பாகத்தில்தான் 'கீழ பழையாறை' இருக்கிறது.

இன்றைய பழையாறை அந்த நாட்களின் சிறு நிழல் கூட இல்லாமல் தமிழகத்தின் இன்னொரு கிராமமாக இருக்கிறது. சில்பியின் ஓவியத்தில் கற்குவியலாய் இருக்கும் பிரகாரம் இப்போது சுற்றுச் சுவருடன் இருக்கிறது. யாரும் வருவது இல்லையால் கோயில் பூட்டியே கிடக்கிறது. அங்கு சென்று ஒரு குரல் கொடுத்தால் ஒரு கோயில் காப்பாளர் வருகிறார்.


கோயில் முன் கோபுரம் விழுந்து மொட்டை கோபுரமாய் நிற்கிறது. விமானம் இப்போது கொஞ்சம் பூசப்பட்டு விழாது நிற்கிறது. கோயில் பிரகாரம் முழுதும் கோயில் இடிபாடுகள் கொட்டி கிடக்கிறது. 'சோமேஸ்வரர்' மட்டுமே எல்லா வரலாற்றுக்கும் மௌன சாட்சியாய் இருக்கிறார்.

பழைய கோயிலின் கருங்கல் மீது சிமெண்ட்  பூசி பெரும்பாலான கல்வெட்டுகள் மறைந்து  விட்டன. பிரகார சுவரும் ஒரு இடத்தில் விழுந்து விட்டது. அரசு இந்த கோயில் புனரமைப்புக்கு ஒரு கோடி ஒதுக்கி இருக்கிறது என்று காப்பாளர் சொன்ன போது சந்தோசமாக இருந்தது (அன்று மாலை இன்னொரு புனரமைப்பை பார்ப்பது வரை மட்டுமே!)

இன்னமும் இங்கு சுற்றி உள்ள வயல்களில் உழும் போது உடைந்த பானைகள், கற்கள் கிடைப்பதாகவும் சொன்னார். ஒரு வயலோரம் காட்டி அங்கு ஒரு மாளிகை இருந்ததாகவும் சொன்னார். இங்கிருந்த சிலைகள் பலவும் பட்டீஸ்வரம் 'தேனுபுரீஸ்வரர்' கோயிலில் இருப்பதாய் சொன்னார்.

இன்றைய பழையாறை எல்லா romantic notionsஐயும் தகர்த்துவிட பழைய பழையாறையின் இன்னொரு  பாகமான 'நந்திபுரம் விண்ணகர'த்தையும் (என்ன ஒரு அழகான பெயர்)  பார்த்து விட்டு அடுத்து பட்டீஸ்வரம் கிளம்பினேன். 

No comments:

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...