பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - 2

பட்டீஸ்வரம்

'தேனுபுரீஸ்வரர்' கோயிலில் நுழைந்தவுடன் ஒரு அதிர்ச்சி காத்து இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் ஒரு பெரிய கான்க்ரீட் மண்டபத்தில் துர்க்கை சன்னதி. தரை முழுதும் மார்பிள் மேவப் பட்டு நமது 21ம் நூற்றாண்டு கலை அம்சத்துடன் கோயில் இருந்தது. இது போக பச்சை, சிகப்பு டிக்கெட் புத்தகங்களுடன் மேலும் எதோ நற்ப்பணிக்காக வசூல் வேட்டையும் நடந்து கொண்டிருந்தது.

கொஞ்சம் பதட்டத்துடன் பின்புறம் சென்ற போது அங்கு 'தேனுபுரீஸ்வரர் சன்னதிக்கு செல்லும் வழி' என்ற போர்டை பார்த்தவுடன் கொஞ்சம் ஆசுவாச படுத்திக் கொள்ள முடிந்தது.

இவை எது பற்றியும் கவலையுறாமல் ஏகாந்த இனிமையில் தேனுபுரீஸ்வரர்,
ஞானாம்பிகை அம்மனுடன் அருள் பாலித்து வருகிறார். இன்னும் சில நாட்களில் முழுதும் ஒரு துர்க்கை கோயிலாக இது மாற்றப் பட்டாலும் ஆச்சர்யம் இல்லை.

பெரும்பாலான ஆலயங்களை போலவே இதுவும் செய்யப்பட்ட நற்ப்பணிகளால் பாதிக்க பட்டு இருக்கிறது. தூண்கள் எல்லாம் வெள்ளை சிமெண்ட் பூசப்பட்டு அதில் இருக்கும் சிறு சிலைகள் எல்லாம் காணவில்லை. உள்ளே ஆலய பிரகாரத்தில் இருந்த நாயக்கர் கால ஓவியங்கள் எல்லாம் வெள்ளை அடிக்கப்பட்டு அழிக்க பட்டுவிட்டன. ஒரு சிறு பாகம் மட்டும் இன்னமும் இருக்கிறது. எதற்கு என்று தெரியவில்லை.


துர்க்கை சன்னதிக்கு வருபவரில் 10க்கு 3 பேர் இங்கு வருவது போல் தெரிகிறது. பெரிய பிரகாரங்கள் ஆள்கள் இன்றி வெறிச்சென காட்சி தருகின்றது. தென்னாடுடைய சிவனுக்கு ஒரு விளக்கு போடவும் ஆள் இல்லை.

பழையாறையில் இருந்து கொண்டு வரப்பட்ட சிலைகள் எங்கு என்று யாருக்கும் தெரியவில்லை. கோயில் மண்டபத்தில் பல்வேறுப்பட்ட சாமான்களும் போடப்பட்டு பூட்டி வைக்க பட்டுள்ளது. அதே மண்டபத்தில் மேற்கூரையில் அழகான ஓவியங்கள் (நாயக்கர் காலத்தவை போல் தெரிந்தது) அங்கு நூலாம்படை கட்டும் சிலந்திகளுக்கு மட்டுமாய் மங்கி கொண்டிருக்கின்றது. பூட்டிய கதவின் வெளியில் இருந்து எவ்வளவு பார்க்க முடியுமோ அவ்வளவு பார்த்து விட்டு வெளியேறினேன்.

பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை

பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைதான் அடுத்த இலக்கு. நான் எடுத்து வந்த வழி என்னை பட்டேச்ஸ்வரத்தை ஒரு சுற்று சுற்றி திரும்பவும் கோயிலுக்கே கொண்டு வந்து சேர்த்துவிட்டது. அப்போது தான் ரோட்டில் ஒருவர் பட்டீஸ்வரம் கோயில் அலுவலகத்தில் சென்று புலவர் என்று ஒருவரை பார்த்து கேக்க சொன்னார். புலவர் வழியை சொல்ல பட்டீஸ்வரத்தின் ஒரு ஓரத்தில் ஒண்டி சந்திற்குள் இருந்த பள்ளிபடையை
கண்டடைந்தோம்.

பள்ளிப்படை என்பது சோழர் காலத்தில் இறந்து போகும் ராஜ குடும்பத்தினர், பெரும் போரில் இறக்கும் வீரர்கள் ஆகியோரது அஸ்தியின் மேல் கோயில் எழுப்புவது. பொன்னியின் செல்வனில் வரும் 'எதிரியின்' பள்ளிபடையில் நடக்கும் சதி எல்லோருக்கும் தெரிந்ததே. இப்போது சோழர் கால பள்ளிபடைகள் கிட்டத்தட்ட இல்லை எனலாம். கொஞ்சம் நல்ல முறையில் இருப்பது இந்த பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை.


பஞ்சவன் மாதேவி என்பவள் ராஜ ராஜ சோழனின் ஐந்தாவது மனைவி. பள்ளிப்படை எழுப்ப பட்டிருப்பதை வைத்து அவள் ராஜ ராஜனின் பிடித்தமான மனைவி என்றும் தெரிந்து கொள்ளலாம். அவளது அஸ்தியின் மேல் ஒரு லிங்கம் அமைக்க பெற்று கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கும் ஒரு காப்பாளர் அருகிலேயே இருக்கிறார். இதன் அருகிலேயே குந்தவை நாச்சியாரின் பள்ளிப்படை இருந்ததாகவும், திருப்பணியின் பொது அதுவும், மடப்பள்ளி, மற்றும் இன்னொரு மண்டபமும் அகற்றப்பட்டு விட்டதாகவும் கூறினார்.
இந்த கோயிலின் ஒரு சுவற்றில் 'பஞ்சவன் மாதேவி'யை குறிப்பிட்டு ஒரு கல்வெட்டு இருக்கிறது. அதை தவிர்த்து இது பள்ளிபடையில் இருந்து ஒரு சிறு கோயிலாய் மாறிக்கொண்டிருகிறது.

அங்கிருந்து திருப்புள்ளமங்கை சென்ற போது மணி 12.30ஐ தாண்டிவிட்டது. கோயிலும் மூடப்பட்டுவிட்டது. சோழர் கால கோயில்களிலே பழமையானதான இந்த கோயிலை பார்க்க முடியாதது சற்று வருத்தமாக இருந்தாலும்,வெளியில் இருந்து பார்த்துவிட்டு இன்னோருமுறைக்காக ஒதுக்கி வைத்துவிட்டு மீண்டும் குடந்தை வந்து சேர்ந்தேன்.

No comments:

Bury My Heart at Wounded Knee

Bury My Heart at Wounded Knee: An Indian History of the American West by Dee Brown I remember the day 20 years ago, when I was standing ...