பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - 4 - திருமழபாடி


திருமழபாடி

நான் முதலில் வாசித்த தேவார பாடல் 'பொன்னார் மேனியனே'. எந்த அர்த்தமும் புரியாது 'பொன்னியின் செல்வன்' வாசிக்கும் போது படித்தது. மிகவும் பிடித்திருந்த அந்த பாடலின் கட்டு. அதை வாசிக்கும் போதே பாட்டாக படித்து விடலாம்.

"பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே."


சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய இந்த பாடல் திருமழபாடியில் இருக்கும் ஆண்டவனை நினைந்து பாடியது. கொஞ்சம் வழியை விட்டு விலகி இருப்பதாலும், கொள்ளிடத்தின் வட கரையில் இருப்பதாலும் அவ்வளவு பிரபலமாக வில்லை போலும்.

திருவையாற்றில் இருந்து ஒரு பேருந்து பிடித்து திருமானூர் வந்து சேர்ந்தேன் அங்கிருந்து சிற்றுந்துகள் இருந்தாலும் காலை கோயில் மூடும் நேரம் நெருங்கியதால் ஒரு ஆட்டோ பிடித்து சென்றேன். 14 கிலோ மீட்டர் தூரம். கொள்ளிடத்தின் சந்தடி அற்ற ஒரு திருப்பத்தில் அழகாய் அமைந்துள்ளது திருமழப்பாடி கோயில்.

கூட்டம் இல்லது பெரும் கோயிலாய் விரிந்து கிடக்கும் இந்த கோயில் நமது திருப்பணிகள் எல்லாம் இல்லாது நன்றாகவே இருக்கிறது.

கோயிலின் இரண்டடுக்கு பிரகாரம் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது. மனித நடமாட்டம் கொஞ்சமாக இருப்பதாலோ என்னவோ பாழ்படாமலும் இருக்கிறது.


கோயில் உள்  பிரகாரம் இரண்டடுக்காக  அழகாக விரிகிறது. நான்கு நந்திகள் அமைந்துள்ள அழகான கோமுகம், தென்னை மரங்கள் சூழ்ந்த வெளி பிரகாரம் என சோழ கால அழகை இன்னமும் இந்த கோயில் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த கோயிலின் கல்வெட்டுக்கள் இன்னொரு சிறப்பு. மிகவும் அழிந்து விடாமல், படிக்கும் வகையில் கோயில் எங்கும் இருக்கிறது. நானிருந்த ஒரு மணி நேரத்தில் 'பொன்னி' , 'ராஜ ராஜ உடையார்' மற்றும் 'சுந்தர சோழ' ஆகியோரை குறிக்கும் கல்வெட்டுகளை பார்க்க/படிக்க முடிந்தது.ஏகாந்தம் எவ்வளவு இனிமையானது என்பது இந்த கோயிலில் தெரிந்து கொள்ளலாம். அமைதி நிலவும் கோயிலின் அர்ச்சகர் ஒரு சிறு பையன். பால் வடியும் முகத்துடன் இருந்த அவன் சேந்தன் அமுதன் போல் சட்டென்று ஒரு தேவார பாடலை பாடிவிடுவனோ என்ற எதிர்பார்ப்புடன் இருந்தேன்.

கோயிலின் எதிர்புறத்தில் கொள்ளிடம் ஆறு வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறது. எந்த ஆற்றிலும் தண்ணீர் இல்லை. லாரி லாரியாக மணல் அள்ளப் பட்டு கொண்டிருக்கிறது .

மிகவும் அமைதியான, சந்தோசமான மன நிலையுடன் கும்பகோணம் திரும்பினேன். திருமானூரில் இருந்து பழுவேட்டரையர்களின் பழுவூர் ஒரு 10-20 கிலோ மீட்டர்களில் இருக்கிறது. அங்கு சென்றால் கும்பகோணம் திரும்ப தாமதம் ஆகிவிடும் என்று செல்லாமலே திரும்பினேன்.

மேலும் படங்கள் --> https://plus.google.com/photos/104749384557340720796/albums/5875492933227684209

1 comment:

periyar said...

My native...

Bury My Heart at Wounded Knee

Bury My Heart at Wounded Knee: An Indian History of the American West by Dee Brown I remember the day 20 years ago, when I was standing ...